×

இந்திய விவசாயிகளில் 59.8% பேர் பெண்கள்

சேலம் : இந்திய விவசாயிகளில் 59.8 சதவீதம் பேர், பெண்கள் என்று உலக மகளிர் தின கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலம் விஆர்டிபி மற்றும் சமூக செயல்பாட்டு இயக்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கு நேற்று நடந்தது. கருத்தரங்குக்கு சமூக செயல்பாட்டு இயக்க சேலம் மாவட்ட அமைப்பாளர் ஜெகதாம்பாள் தலைமை வகித்தார். விஜயா வரவேற்றார். விஆர்டிபி இயக்குனர் ரெங்கநாதன், கலைச்செல்வி, அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஞானசெளந்தரி, துணைத்தலைவர் ராசாத்தி, கிருஷ்ணவேணி, பெரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் விஆர்டிபி இயக்குனர் ரெங்கநாதன் பேசியதாவது:  உலகம் முழுவதும் ஆண், பெண் ஏற்ற தாழ்வு தொடர்ந்து நீடிப்பதால் சிறந்த உலகை படைக்க ஆண், பெண் சமநிலை உருவாக்குவோம் என்ற கருத்தின் கீழ் நடப்பாண்டு சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று உலகில் பெண்கள் நிலையை கணக்கில் எடுத்துக்கொண்டால் விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளில் பெண்களே அதிகமாக ஈடுபடுகின்றனர். இந்திய விவசாயிகளில் 59.8சதவீதம் பேர், பெண்கள் என்பதும், 43 சதவீதம் ஆண்கள் மட்டுமே விவசாய பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் பெண்களுக்கு 6 சதவீதம் மட்டுமே கடன் கிடைக்கிறது. ஆண்களுக்கு 8.6 சதவீதம் கிடைக்கிறது. உலகளவில் அரசின் தலைமை பொறுப்பில் வெறும் 8 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். இது உலகில் இன்றைய பெண்களின் நிலையை எடுத்துக்காட்டுகிறது. வரலாற்றில் ஒரு மகிழ்ச்சியான சமூகத்தை காண ஆண், பெண் சமநிலை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்காக அடித்தள நிலையில் பணியாற்ற வேண்டும்.

ஆண் பெண் சமநிலை என்பது பெண்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல. அது நிர்வாகம், வியாபாரம், அரசு நிலைகளையும் பிரதிபலிக்க வேண்டும். நிர்வாகம், அரசியல், ஊடகம், வேலை வாய்ப்புகளிலும், சொத்து வளங்கள், விளையாட்டிலும் பெண்கள் ஜொலிக்க வேண்டும். சமூகமும் அதன் பொருளாதாரமும் உயர்வோடு இருப்பதற்கு ஆண், பெண் சம நிலை மிகவும் அவசியம். இவ்வாறு ரெங்கநாதன் கூறினார்.

தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும்

‘‘பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் மீதான வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும். பெண்கள் மீதான வன்முறை குறித்த வழக்குகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவிலேயே ஆணா, பெண்ணா என கண்டறியும் அனைத்து விதமான தொழில் நுட்பங்களையும் தடை செய்ய வேண்டும்.

பதிவு செய்யாத, பதிவை புதுப்பிக்காத மற்றும் பதிவு ஏடுகளை பராமரிக்காத அனைத்து ஸ்கேன் மையங்களையும் அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். பெண் குழந்தைகளை பாதுகாக்க போஸ்கோ சட்டத்தை அரசு கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்,’’ என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,Indian , Women Farmers , International Womens day, Womens day
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...