×

போட்டு 20 வருசம் ஆச்சு மண்சாலையாக மாறிய தார்ச்சாலை

* 10 கிராமமக்கள் கடும் அவதி

சிவகங்கை :  சிவகங்கை அருகே திருமலையில் இருந்து மேலப்பூங்குடி செல்லும் சாலை ஆண்டுக்கணக்கில் குண்டும், குழியுமாய் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மயில்ராயன்கோட்டை நாடு என அழைக்கப்படக்கூடிய பகுதியின் தலைக்கிராமம் கட்டாணிப்பட்டி ஆகும். கட்டாணிப்பட்டியில் இருந்து சருகுவலையபட்டி, தனியமங்கலம் வழி செல்லும் இச்சாலை மேலூர் சாலையில் இணைகிறது. சுமார் 5 கி.மீ தூரமுள்ள இந்தச்சாலை 1999-2000 காலகட்டத்தில் போடப்பட்டது. இச்சாலை போடப்பட்டு 20 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 6 ஆண்டிற்கும் மேலாக சாலை முற்றிலும் சேதமடைந்த நிலையில் மண்சாலையாக மாறிவிட்டது.

இச்சாலையில் மேலூர் முதல் கட்டாணிபட்டி, மேலூர் முதல் கட்டாணிபட்டி வழி மதகுபட்டி வரையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தும் முக்கியமான இச்சாலை பல ஆண்டுகளாக மராமத்து கூட செய்யப்படாமல் உள்ளது. இச்சாலை வழி செல்வதென்றால் அதிகப்படியான தூசி மற்றும் உடல் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவலமும் ஏற்படுகிறது.

எனவே உடனடியாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மக்கள் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளாக சாலை பயன்படுத்தும் நிலையில் இல்லை. வேறு வழியில்லாமல் சாலை வழி செல்கிறோம். இரவு நேரத்தில் படுமோசமான இந்த சாலையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அமைச்சரின் சொந்த தொகுதிக்குள் வருவதால் அவரிடம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தோம். சாலையை வந்து பார்வையிடுவதோடு சரி. வேறு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் மக்கள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இங்கு புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் இறங்குவதை தவிர வேறு வழியில்லை’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : turnaround ,sandstorm , sivagangai,Roads ,villages ,damaged
× RELATED சென்னையில் வெள்ள பாதிப்புக்கு...