×

விளைநிலங்களில் உயர்மின் கோபுர திட்டத்தை கைவிடக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்

பள்ளிபாளையம்: விளைநிலங்களில் உயர்மின் கோபுர திட்டத்தை கைவிடக்கோரி, பள்ளிபாளையம் அருகே விவசாயிகள்  வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்களை கொண்டு செல்லும் திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் சாமண்டூரில் கடந்த 3ந்தேதி முதல் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தினமும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் நேற்று வீடுகளில் கருப்பு கொடியேற்றினர். உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்படும் 14 மாவட்ட விவசாயிகளின் வீடுகள் மற்றும் விளைநிலங்களில் கருப்பு கொடியேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, உண்ணாவிரத பந்தலில் விவசாயிகள் கருப்பு கொடிகளை ஏற்றி கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

போராட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில  உதவித்தலைவர் நல்லாகவுண்டர், பொன்னி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க  நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு அவர்களது உடல்நிலை, ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. டவரில் ஏறி போராட்டம்: கோவையை அடுத்த சுல்தான்பேட்டையில், பல்லடம், பொள்ளாச்சி சாலையில் விவசாயிகள் கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தி அங்குள்ள டவர் லைனில் ஏறி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுல்தான்பேட்டையை அடுத்த வாரப்பட்டி, சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். தமிழக அரசும், மத்திய அரசும் உயர் மின்கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளாவிட்டால்  நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : homes , Farmers struggle , blackmail the farmers' , quarantine housing project
× RELATED ரீமல் புயல் காரணமாக மேற்குவங்க மாநிலத்தில் 7 பேர் உயிரிழப்பு!