×

கூடலூர் பென்னிகுக் மணி மண்டபம் அருகே வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ : அரியவகை மூலிகை செடிகள் நாசம்

கூடலூர்: தேனி மாவட்டம், கூடலூர் வனச்சரகம் பளியன்குடி காப்புக்காடு பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீர் தீ ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக பற்றிய தீ பின்னர் பரவலாக காட்டுத்தீ போல பற்றி எரியத்தொடங்கியது.  தொடர்ந்து வனப்பகுதியில் பரவிய இந்த பயங்கர தீ இரவு முழுவதும் தொடர்ந்தது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் தீயில் கருகி நாசம் அடைந்தன. இந்த மலைப்பகுதியில் உள்ள அபூர்வ மூலிகைச்செடிகளும் நாசமானது. வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் இரவில் யானையெச்சம் பகுதியில் கிடந்த தீ கங்குகள் காற்றில் பரவி, போதை புற்களில் பட்டு மீண்டும் தீப்பிடிக்க தொடங்கியது. இந்த தீ காற்றில் பரவி லோயர்கேம்ப் பென்னிகுக் மணிமண்டபம் ஒட்டிய மலைப்பகுதி வரை பற்றி எரிந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை வனத்துறையினர் நவீன தீயணைப்புக்கருவிகள் ஏதும் இல்லாததால் செடிகளை வெட்டி போராடி தீயை அணைத்தனர். சத்தியமங்கலம் அருகே 10 ஏக்கர் மரங்கள் கருகியது:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. நேற்று முன்தினம் இரவு  கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கம்பத்து ராயன்கிரிமலை, கானக்குந்தூர் வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. சத்தியமங்கலம் வனத்துறையினர் மலை கிராம மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், 10 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் எரிந்து நாசமானது.

பெரியகுளம் அருகே பயங்கர காட்டுத்தீ

தேனி மாவட்டம், பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் அகமலை ஊராட்சிக்குட்பட்ட சின்னூர், பெரியூர் வனப்பகுதியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் நேற்று காட்டுத்தீ பிடித்தது. இதனால் அரியவகை மரங்கள் எரிந்து நாசமடைந்தன. இந்நிலையில் பெரியகுளம் பகுதியில் பெய்த மழையால் காட்டுத்தீ அணைந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forest ,Bellur Bennikukku Mandapam ,plants , Forest , Bellur Bennikukku Mandapam, destruction of rare herbal plants
× RELATED சுற்றுலா பயணிகள் செல்ல தடை ஊட்டி பைன் பாரஸ்ட் பகுதியில் புலி நடமாட்டம்