×

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அதிமுகவினரிடம் 11, 12ல் நேர்காணல் : இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: மக்களவை பொதுத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வருகிற 11, 12ம் தேதி நேர்காணல் நடத்தப்படும் என்று எடப்பாடி, ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரி விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கு வருகிற 11ம் தேதி (திங்கள்), 12ம் தேதி (செவ்வாய்) ஆகிய இரண்டு நாட்கள், நேர்காணல் நடைபெறும். அதன்படி 11ம் தேதி காலை 9.30 மணிக்கு சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), கோவை, பொள்ளாச்சி, விழுப்புரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கும், பிற்பகல் 3 மணிக்கு தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறும்.

12ம் தேதி காலை 10 மணிக்கு  திருவள்ளூர் (தனி), சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, பெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய தொகுதிகளுக்கும், மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறும்.
அதிமுக வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரி, தங்களுக்கு மட்டும் விருப்ப மனு அளித்துள்ள அனைவரும், இந்த தேதி மற்றும் நேரத்தில் தவறாமல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த மாதம் விருப்ப மனு வாங்கப்பட்டது. அதன்படி 1,737 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் தொகுதி வாரியாக நேர்காணலில் கலந்து கொள்வார்கள். இவர்களிடம் அதிமுக ஆட்சி மன்ற குழுவில் இடம்பெற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மதுசூதனன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேர்காணல் நடத்துவார்கள் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : OBS Announcement ,EPS , Opposition to contest, Lok Sabha elections ,11th, 12th
× RELATED சொல்லிட்டாங்க…