அபிநந்தனுக்கு பரம் வீர் சக்ரா விருது: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கோரிக்கை

சென்னை: அபிநந்தனுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடந்த பிப்ரவரி 14ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்திய வான் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை, இந்திய விமான படையின் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் செலுத்தினார். அவர் பாகிஸ்தான் ஆயுத படையினால் பிடிக்கப்பட்டார். சர்வதேச அளவில் எழுந்த கடுமையான நிர்ப்பந்தங்களால் 1ம் தேதியன்று அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது. அபிநந்தன் மோசமான சூழ்நிலைகளிலும் முகத்தில் மிகுந்த நம்பிக்கையையும் உறுதியையும் காட்டினார். இதனால் நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் அவர் இடம் பிடித்துள்ளார். தைரியமான இந்த வீரதீர செயல்பாட்டுக்காக, அவருக்கு இந்தியாவின் ராணுவத்துக்கான உச்சபட்ச விருதை அளிப்பது கவுரவமாக இருக்கும். எனவே அபிநந்தன் வர்தமானுக்கு தேசத்தின் உயர்ந்த விருதான பரம் வீர் சக்ரா விருதை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். பிரதமருக்கு நன்றி: சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி தெரிவித்துள்ளார். ‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடந்த 6ம் தேதி வண்டலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டீர்கள். இதற்காக தமிழக மக்களின் சார்பில் எனது இதயப்பூர்வமான நன்றியை கூறிக்கொள்கிறேன்’ என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>