×

திமுக கதவை அடைத்ததால் இறங்கி வந்தது அதிமுக ஒதுக்கும் 4 சீட்டை பெற தேமுதிக சம்மதம்?வடக்கு, மேற்கு மாவட்டங்களில் தொகுதியையாவது ஒதுக்க விஜயகாந்த் கோரிக்கை

சென்னை:  திமுக கதவை அடைத்ததால் இறங்கி வந்த தேமுதிக, அதிமுக கொடுக்கும் 4 தொகுதிகளை வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டது.  யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பது குறித்து மு.க.ஸ்டாலி நாளை முதல் ஆலோசனை நடத்தி அடுத்த சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 7 சீட், பாஜகவுக்கு 5 சீட், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 சீட் என ஒதுக்கப்பட்டுள்ளது. இது போக அதிமுகவிடம் தற்போது 25 சீட்கள் உள்ளன. அதில் தேமுதிகவுக்கு 4 சீட் தருவதற்கு அதிமுக தலைவர்கள் முன் வந்தனர். ஆனால், பாமகவுக்கு இணையாக 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 21 ெதாகுதிகளில் 7 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதற்கு அதிமுக சம்மதிக்கவில்லை. எங்கள் நோக்கமே 21 தொகுதிகளை கைப்பற்றுவது தான். அப்படியிருக்கும் போது தேமுதிகவுக்கு எந்தவிதத்திலும் சீட் வழங்கப்படாது என்று அதிமுக கறாராக கூறி விட்டது. பாஜ நெருக்குதலால் தேமுதிகவை தன் பக்கம் இழுக்க தொடர் பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டது.  துணை முதல்வர் ஓபிஎஸ் நேரடியாக விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று கடந்த 5ம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அதிமுகவின் கோரிக்கையை பிரதமர் சென்னை வரும் வரை தேமுதிக ஏற்கவில்லை. இதையடுத்து, பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் இருந்த விஜயகாந்த் படம் அகற்றப்பட்டது. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தபோதே, திமுகவுடனும் கூட்டணி தொடர்பாக தேமுதிகவினர் பேசிக் கொண்டிருந்தனர். இது அதிமுகவினருக்கு கடும் டென்ஷனை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. தேமுதிகவிற்கு சீட் தருவதற்கு எங்களிடம் சீட் இல்லை என்று துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த தேமுதிக துணைசெயலாளர் எல்.கே.சுதீஷ் மீண்டும் நட்சத்திர ஓட்டலில், மத்திய அமைச்சரும், தமிழக பாஜ பொறுப்பாளருமான பியூஸ் கோயலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், கடுப்பான பியூஸ் கோயல் நேற்று முன்தினம் இரவே டெல்லி புறப்பட்டு சென்றார். ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் பேசியதால் தமிழக அரசியல் களத்தில் தேமுதிக நம்பகத்தன்மையை இழந்து விட்டது. இனி அந்தக் கட்சியை கூட்டணியில் சேர்த்தால், நம்மை சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறுவார்கள். இதனால் தேமுதிகவுடன் இனி பேச வேண்டாம். அவர்களாக வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். ஏற்கனவே திமுக கதவை சாத்தி விட்டது. முதல்வரின் இந்த நடவடிக்கையில் அதிமுகவின் கதவும் சாத்தப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரிதவிப்புக்கு ஆளானார். கிட்டத்தட்ட தனித்து போட்டியிடும் நிலைக்கு ேதமுதிக தள்ளப்பட்டது. தேமுதிக தொண்டர்களும் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்தநிலையில், மீண்டும் தேமுதிக தரப்பில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக குழுவுடன் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 4 தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என்று அதிமுக தரப்பில் கறாராக கூறப்பட்டதாம். வேறுவழியின்றி இதை சுதீஷ் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதை விஜயகாந்த்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலாவது 4 தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் 4 சீட்டுகள் தருகிறோம். அதில் 2 தனித் தொகுதிகளாகும். இதனால் அதை ஏற்பதற்கு சம்மதிக்காமல் விஜயகாந்த் உள்ளார். இதற்கிடையில், ஜெயலலிதாவையும், அதிமுகவையும் பிரேமலதா கண்டபடி திட்டி பேட்டி கொடுத்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பிரேமலதா கூறியது பரவாயில்லை என்று தேமுதிகவுடன் அதிமுக பேசுமா அல்லது தொண்டர்கள் கோரிக்கையை ஏற்று தேமுதிகவை கழற்றி விடுமா என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாமக கடும் எதிர்ப்பு?
அதிமுகவுடன் கூட்டணி ேபச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, திமுகவுடன் கூட்டணி பேசிய தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்று பாமக தரப்பில் இருந்து அதிமுகவுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளது. தங்களை எதிரியாக தேமுதிக பார்க்கிறது. அவர்கள் எங்களுக்கு வேலை செய்ய மாட்டார்கள். எனவே தேமுதிகவை சேர்க்க வேண்டாம் என்று பாமக வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayakanth ,AIADA , DMK, AIADMK, DMDK, Vijayakanth
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக...