×

நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

* தமிழகத்தில் 72 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு
* விடுபட்ட குழந்தைகளுக்கு 11, 12ம் தேதி வழங்க முடிவு

சென்னை: தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி (நாளை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு 11, 12ம் தேதிகளில் வீடுவீடாக சென்று சொட்டு மருந்து வழங்க திட்டமிட்டுள்ளதாக சுகதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடக்க உள்ளது. இந்தியாவில் 1994ம் முதல் போலியோ பாதிப்பை நீக்குவதற்கான விழிப்புணர்வு தொடங்கியது.  1995ம் ஆண்டு முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் இணைந்து,  இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் 2004ம் ஆண்டுக்கு பின் போலியோ பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதுமுதல் தமிழகம் போலியோ  இல்லாத மாநிலமாக உள்ளது.  தமிழகதத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு, விடுபட்ட  குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கும் போலியோ சொட்டு மருந்து  வழங்கப்பட்டு வருகிறது. யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் போலியோ  சொட்டு மருந்து முகாம்  நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு 67  லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சுகாதாரத்துறை ஊழியர்கள், மாநகராட்சி  பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் என 2 லட்சத்துக்கும்  அதிகமானோர் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும்  போலியோ சொட்டு மருந்தை வினியோகம் செய்தனர். இந்த ஆண்டு 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 43,051 சொட்டு மருந்து வினியோக மையங்கள் அமைக்கப்பட உள்ளன. போலியோ சொட்டு மருந்து முகாம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆட்டோக்களில் ஒலிபெருக்கியை கட்டி அறிவிப்பு வெளியிடுதல், நோட்டீஸ் வழங்குதல் நேற்று தொடங்கியது. அதே போல் விழிப்புணர்வு மேற்கொள்ளும் பணிகள் இன்றும் தொடரும்.
முகாமில் சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படும். அதன் மூலம் மார்ச் 11, 12ம் தேதிகளில் வீடுவீடாக சென்று விடுபட்ட குழந்தைகள் கண்டறிந்து, அவர்களுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும்.   இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : camp ,country , Polio drops camp ,tomorrow across the country
× RELATED வேளாண் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்