×

கோஹ்லியின் 41வது சதம் வீண் 32 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி: பிஞ்ச், கவாஜா அசத்தல்

ராஞ்சி: இந்திய அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 32 ரன் வித்தியாசத்தில் வென்று, தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸி. அணியில் கோல்டர் நைலுக்கு பதிலாக ஜை ரிச்சர்ட்சன் இடம் பெற்றார். தொடக்க வீரர்களாக கேப்டன் பிஞ்ச், கவாஜா களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 31.5 ஓவரில் 193 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். சமீபத்திய போட்டிகளில் தொடர்ச்சியாக சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த பிஞ்ச், இழந்த பார்மை மீட்டார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 93 ரன் எடுத்து (99 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) குல்தீப் சுழலில் எல்பிடபுள்யு ஆனார். அபாரமாக விளையாடிய கவாஜா சதம் அடித்து அசத்தினார். கவாஜா 104 ரன் (113 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஷமி வேகத்தில் பூம்ரா வசம் பிடிபட்டார். அதிரடியாக விளையாடி மிரட்டிய மேக்ஸ்வெல் 47 ரன் எடுத்து (31 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ரன் அவுட்டானார். அடுத்து வந்த ஷான் மார்ஷ் 7 ரன் எடுக்க, ஹேண்ட்ஸ்கோம்ப் டக் அவுட்டாகி வெளியேறினார். ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன் குவித்தது. ஸ்டாய்னிஸ் 31, கேரி 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் குல்தீப் 3, ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 314 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்கள் தவான் 1 ரன், ரோகித் 14 ரன்னில் பெவிலியன் திரும்பியது இந்திய அணிக்கு பின்னடைவைக் கொடுத்தது. அம்பாதி ராயுடு 2 ரன்னில் வெளியேற, இந்தியா 27 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கேப்டன் கோஹ்லி - டோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்தது. டோனி 26 ரன் எடுத்து ஸம்பா பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

கோஹ்லி - கேதார் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்தது. அபாரமாக விளையாடிய கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் தனது 41வது சதத்தை பதிவு செய்ததுடன், கேப்டனாக 4000 ரன்களை விரைவாக எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார் (63 இன்னிங்ஸ்). தென் ஆப்ரிக்காவின் டி வில்லியர்ஸ் 77 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். கேதார் 26 ரன், கோஹ்லி 123 ரன் (95 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி நம்பிக்கை இழந்தது. கடைசி கட்டத்தில் போராடிய விஜய் ஷங்கர் 32 ரன், ஜடேஜா 24 ரன்னில் வெளியேறினர். ஷமி 8, குல்தீப் 10 ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா 48.2 ஓவரில் 281 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பூம்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா 32 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸம்பா தலா 3 விக்கெட், லயன் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 2-1 என முன்னிலை வகிக்க, 4வது போட்டி மொகாலியில் நாளை நடக்கிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kohli ,victory ,Australia ,Kawasaki , Indian team, Kohli, Australia, pinch, kawaja
× RELATED டி20 உலக கோப்பையில் விராட் கோஹ்லி நீக்கமா?: முன்னாள் வீரர்கள் காட்டம்