×

பயிற்சி கொடுத்தால் நாங்களும் கிங்குதான் கல்லடி வாங்கிய ஆஷாவின் அசத்தல்

கொல்கத்தா: சாலையில் இருந்து மீட்கப்பட்ட நாய் குட்டி, காவல் துறையின் நாய்கள் பயிற்சி முகாமில் பயிற்சி முடித்து தற்போது பணியை தொடங்க தயாராக உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சிறுவர்களிடம் சிக்கி நாய் குட்டி ஒன்று கல்லடி வாங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர் அதை மீட்டார். அதற்கு ஆஷா என பெயரிட்ட அவர், அதை காவல் துறையின் மோப்ப நாய்கள் பயிற்சி பிரிவில் சேர்த்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சி பெற்ற ஆஷா, தற்போது பயிற்சியில் சிறந்து விளங்குகிறது. இது குறித்து பாராக்போர் டிஐஜி திபன்கர் பட்டாசார்யா கூறுகையில், “ சாலையில் இருந்து மீட்கப்பட்ட ஆஷா, ஒன்றரை ஆண்டு பயிற்சிக்கு பின்னர் தற்போது மோப்ப நாய்கள் பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதலில் அதற்கு பயிற்சி அளிப்பதாக எந்த திட்டமும் இல்லை.

இன்ஸ்பெக்டர் ஜெனரல் (பயிற்சி) ஜெயராமன் அதற்கு பயிற்சி அளிக்கலாம் என்றார். ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ராடார்ஸ் போன்ற உயர்வகை நாய்களுடன் இணைந்து ஆஷாவும் பயிற்சி பெற்றது. மோப்ப சக்தி மூலம் வெடிப்பொருட்களை கண்டறிவதில் மிக சிறந்தது என்பதை ஆஷா நிரூபித்துள்ளது. உயர்வகை நாய்கள் மட்டும்தான் காவல்துறையின் நாய்கள் பிரிவில் இருக்க முடியும் என்பதை ஆஷா முறியடித்து காட்டியுள்ளது. உயர் ரக நாய்களை விட தான் மிகவும் சிறப்பாக செயல்படுவதை ஆஷா செய்து காட்டியுள்ளது. ஆஷா பணியாற்ற தயாராகி விட்டது. விரைவில் மோப்ப நாய் பிரிவில் இணைக்கப்பட்டு பணியை தொடங்கும்.” என்றார். மற்றொரு மூத்த அதிகாரி கூறுகையில், “ ஆஷா எவ்வாறு நிற்பது, நடப்பது, வணக்கம் ெசய்வது, உருளுவது போன்ற அனைத்து பயிற்சிகளையும் விரைவில் கற்றுக் கொண்டது” என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asha ,Kallukku Kallukku , Asha
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...