×

ராமேஸ்வரம் வில்லூண்டி தீர்த்தம் கடலில் விடப்பட்ட 11 லட்சம் இறால் குஞ்சுகள்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் வில்லூண்டி தீர்த்தம் கடல் பகுதியில் நேற்று மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 11 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் பாக்ஜலசந்தி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் அவ்வப்போது இறால் மற்றும் மீன் குஞ்சுகள் கடலில் விடப்படுகிறது. கடந்த 10 மாதங்களில் மட்டும் 14 லட்சம் இறால் குஞ்சுகள் ஏற்கனவே மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் பாம்பன் குந்துகால், ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியில் விடப்பட்டது.

நேற்று ராமேஸ்வரம் வில்லூண்டி தீர்த்தம் கடல் பகுதியில் 11 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டது. நேற்று மாலை ராமேஸ்வரம் அருகிலுள்ள தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம் கடல் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளால் கேன்களில் கொண்டு வரப்பட்ட இறால் குஞ்சுகள் நாட்டுப்படகில் ஆழமான பகுதிக்கு எடுத்துச்சென்று மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் கடலில் விடப்பட்டது.

இறால் குஞ்சுகளை கடலில் விட்டபின் கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 150 மீனவ கிராமங்கள் கடலோரத்தில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடலில் மீன்வளம் அதிகளவில் உள்ளது. இக்கடல் பகுதியில் இறால் மீன் வளத்தை அதிகரிக்க செய்யும் வகையில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மையத்தினால் இறால் குஞ்சுகள் விடப்பட்டது.

ஏற்கனவே 14 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்ட நிலையில், தற்போது 11 லட்சம் குஞ்சுகள் பாக்ஜலசந்தி கடலில் விடப்பட்டுள்ளது. இதனால் நமது மீனவர்களுக்கு அதிகளவில் இறால் மீன்கள் கிடைக்கும். மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மையத்தினால் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றார்.மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி ஜெயக்குமார், உறுப்பினர் முரளிதரன் உட்பட விஞ்ஞானிகள் பலர் பங்கேற்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rameswaram villilli ,sea , rameshwaram ,Villuvandi Theertham,Shrimp Chicks,sea
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்