×

ஆண்டிபட்டியில் விலை வீழ்ச்சியால் வெங்காயத்தை அறுவடை செய்ய தயக்கம்

* விவசாயிகள் கவலை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் வெங்காய விலை வீழ்ச்சியால் பல நூறு ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட அறுவடை செய்ய விவசாயிகள் தயங்கி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி விவசாயம் நிறைந்த பகுதியாகும். ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள புள்ளி மான்கோம்பை, தர்மத்துப்பட்டி, அணைக்கரைபட்டி, ராஜதானி, ஜி.உசிலம்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, தெப்பம்பட்டி, கணேசபுரம், கண்டமனூர் உள்பட 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

அதில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெங்காயம், தக்காளி, அவரை, கத்தரி, வெண்டை, பச்சை மிளகாய், முட்டைகோஸ், காளிப்ளவர், முருங்கை போன்ற காய்கனிகள் வகைகளையும், செவ்வந்தி, முள்ளை, ரோஜா, மல்லிகை , கனகாம்பரம், சம்மங்கி, கோழிக் கொண்டை உள்ளிட்ட பூ வகைகளையும், மரிக்கொழுந்து, மருகு போன்ற செண்டு பூக்களை 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் விலை இறக்கத்தில் உள்ளதால் தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்டவைகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலை இறக்கத்தில் உள்ளது. இதனால் வெங்காயத்தை அறுவடை செய்யாமலேயே, விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் சில விவசாயிகள் அறுவடை செய்த வெங்காயத்தை மார்க்கெட்டிற்கு அனுப்பலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயி லட்சுமணன் கூறுகையில், `` தற்போது 5 ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்துள்ளேன். இதற்கு முறையாக உழவடை பணிகள் செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் செலவாகிறது. தற்போது வெங்காயத்தின் விலை கிலோ ரூ.15 லிருந்து ரூ.20 க்கு விற்பனையாகிறது. இதனால் நஷ்டம் அதிகமாக ஏற்படுகிறது. வெங்காயத்தை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாததால் தமிழக அரசு நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்குவது போன்று வெங்காயத்திற்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். இல்லை எனில் விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு வெங்காய விவசாயிகள் தள்ளப்படுவார்கள் என்று கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andipatti , onions,Andipatty,onion Price, price low,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி