×

ஆண்களுக்கு துளியும் சளைத்தவர்கள் அல்ல... கடலில் களமிறங்கி கலக்கும் பெண்கள்

*  காயம்பட்டு பாசி சேகரித்தும் பயனில்லை
* கரங்கள் கொடுத்து தூக்கி விடுமா அரசு?

ராமேஸ்வரம் : பாம்பன் கடல் பகுதியில் கடல் பாசி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் தங்களின் வாழ்க்கைத்தரம் உயர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ பெண்கள் தெரிவித்தனர்.இன்று உலக மகளிர் தினம். இவ்வுலகில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் விண்ணிலும், மண்ணிலும் சாதனை படைத்து வருகின்றனர். தங்களால் முடியாதது எதுவுமில்லையென தன்னம்பிக்கையோடு செயல்பட்டு அசத்தி வருகின்றனர். அந்த வகையில் மிகவும் சிரமமான ஒன்றான கடல் பாசி சேகரிப்பு தொழிலில் ஈடுபடும் பெண்களின் வாழ்க்கையை நிலையை பார்ப்போமா? மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் பாம்பன், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் கடலோர பகுதியில் ஆழம் குறைவான பாறைகள் அடர்ந்த கடல் பகுதியில் மரிக்கொழுந்து, கட்டக்கோரை, பக்கோடா மற்றும் கஞ்சிப்பாசி போன்ற கடல் பாசிகள் அதிகளவில் வளர்கின்றன.

பாறைகளின் மேல் வளரும் இந்த பாசிகளில் இருந்து உணவுப்பொருட்கள், மருந்து மற்றும் வேதிப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் பாம்பன் சின்னப்பாலம், ராமேஸ்வரம் வடகாடு, சம்பை, மாங்காடு பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவ பெண்கள் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ஒருவர் அதிகபட்சமாக 50 கிலோ வரை பாசி சேகரிப்பில் ஈடுபடும் இப்பெண்கள் கடல் நீர் வற்றியிருக்கும் அதிகாலை நேரத்தில் கடலுக்குள் சென்று கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி பாறையில் இருக்கும் பாசிகளை கைகளால் சேகரிக்கின்றனர்.

வளரும் நிலையிலுள்ள கொழுந்துகளை தவிர்த்து நன்கு வளர்ச்சியடைந்த முதிர்ந்த பாசிகளை மட்டும் சேகரிக்கும் இவர்கள், பாறையில் இருந்து பாசியை எடுக்கும்போது கைகளில் காயம் ஏற்படாமல் இருக்க சாதாரண கையுறைகளை பயன்படுத்துகின்றனர். இதனையும் மீறி கைகளில் காயம் ஏற்பட்டால் பல நாட்கள் கடலில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

அதிகாலை 5 மணிக்கெல்லாம் பாசி சேகரிக்க செல்லும் இவர்கள் மதியம் 3 மணிக்கு மேல்தான் திரும்புவார்கள். காற்று, புயல் காலம் தவிர மற்ற நாட்களில் மாதத்திற்கு இடைவிட்டு 10 முறை மட்டுமே பாசி சேகரிக்கின்றனர். சேகரிக்கப்பட்ட பாசியை பல நாட்கள் காயவைத்து விற்பனை செய்கின்றனர். கடலில் 50 கிலோ பாசி சேகரித்தால் வெயிலில் நன்கு உலர்ந்த நிலையில் 16 கிலோ எடை மட்டுமே இருக்கும். காய்ந்த பாசியை வகைக்கேற்றவாறு ரூ.40 முதல் ரூ.50 வரை வியாபாரிகள் விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

நேற்று காலை பாம்பன் சின்னப்பாலத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் பாம்பன் வடக்கு கடல் பகுதியில் கடல் பாசி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் நம்பு (64) என்ற வயதான பெண்னும் முகத்தில் கண்ணாடி, கையுறை அணிந்து ஆர்வத்துடன் கடல் பாசியை சேகரித்துக்கொண்டிருந்தார். அவரிடம் பேசியபோது, ‘‘8 வயது சிறுமியாக இருந்தபோது அம்மாவுடன் பாசி சேகரிக்க வந்தேன். இப்போது வரை சீசனில் பாசி சேகரித்து வருகிறேன். இதில் ஒன்றும் பெரிய அளவில் வருவாய் கிடைக்காவிட்டாலும், சின்ன சின்ன வீட்டுச்செலவுகளுக்கு ஆகிறது.

ஆண்கள் மீன்பிடித் தொழில் செய்து வந்தாலும், கிடைக்கும் வருவாய் அன்றாட செலவுகளுக்கு பற்றாத நிலையில் இதில் கிடைக்கும் பணம் எங்களுக்கு அவசரத்திற்கு உதவுகிறது. வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் பாசி சேகரிக்க வந்து விடுவேன். எங்களின் வாக்கைத்தரம் உயர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். பல தலைமுறையாக பாசி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இம்மீனவ பெண்கள் இதுநாள் வரை பொருளாதார ரீதியில் சிறிதளவுகூட உயரவில்லை. கடற்கரையில் சிறிய குடிசைகளில்தான் இன்றும் இவர்கள் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இன்று உலகமெங்கும் மகளிர் தினம் கடைப்பிடிக்கப்படும் இந்நாளில் பாரம்பரியமாக கடல் வளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் கடல்பாசி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இப்பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு அரசு முன்வர வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,sea , Rameshwaram,Fisher women,Pampan Sea,Womens day 2019 ,Womensday
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...