×

அயோத்தி பிரச்சினையில் மத்தியஸ்தர்களை நியமித்து இணக்கமான தீர்வு காண வேண்டும் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி : அயோத்தி நிலப் பிரச்னையை நீதிமன்றம் நியமிக்கும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் பிரச்சனைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் தொடர்பாக தீர்வு காண மத்தியஸ்தர்களை நியமித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அயோத்தி பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையை 8 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

 உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்  1992ம் ஆண்டு பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சனை எழுந்தது. இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பும் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ளுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு வழக்கு

இந்த உத்தரவை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்தனர். மேலும் இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே அயோத்தி நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இம்மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஜனவரி 8ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம்

அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி ரமணா, யுயு லலித், சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு அயோத்தி வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பாபர் மசூதி தொடர்பான வழக்கில் ஏற்கனவே வழக்கறிஞராக இருந்ததால் இந்த அமர்வில் இருந்து விலகுவதாக கடந்த ஜன., 10ம் தேதி நீதிபதி யுயு லலித் கூறினார். இதனால் அயோத்தி வழக்கு ஜனவரி 29ம் தேதி விசாரிக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. பின்னர் நீதிபதி யுயு லலிதின் கோரிக்கை ஏற்கப்பட்டு வழக்கு விசாரணை அமர்வு மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர், எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசத் ஆகியோர் கொண்ட அமர்வினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார். இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு பிப்ரவரி 26ம் தேதி அயோத்தி வழக்கை விசாரணைக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

மத்தியஸ்தர்கள் அடங்கிய குழு மூலம் தீர்வு காண நீதிபதிகள் கருத்து

இதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அயோத்தி விவகாரத்தை நிலபிரச்னையாக பார்க்கவில்லை மத நம்பிக்கை சார்ந்த விஷயமாக பார்க்கிறோம் என்று கூறினர். இதனிடையே சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான ஆவணங்களை 6 வாரங்களில் மொழிபெயர்த்து வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு மார்ச் மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மார்ச் மாதம் 5ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மத்தியஸ்தர்கள் அடங்கிய குழு அமைத்து அயோத்தி பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்று அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி கருத்து தெரிவித்தார். அயோத்தி விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தர் நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம்  பரிசீலனை செய்தது.

இந்து அமைப்புகள் எதிர்ப்பும் முஸ்லிம் அமைப்புகள் ஆதரவும்

அப்போது நடைபெற்ற விசாரணையின் போது சர்ச்சைக்குரிய நிலப்பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தரை நியமிப்பது பற்றி நீதிமன்றம் முடிவு செய்யும் என நீதிபதிகள் கூறினர். ஆனால் இந்து அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முடிவை பொதுமக்கள் ஏற்கமாட்டார்கள் என இந்து அமைப்புகள் வாதிட்டன. அயோத்தி விவகாரம் நிலப்பிரச்சனை கிடையாது. இந்து மத ரீதியிலான மக்களின் நம்பிக்கை சார்ந்த விவகாரம் எனவும் இந்து அமைப்புகள் வாதிட்டன.

அதே சமயம் அயோத்தி பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அயோத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், பிரச்சனையை சுமுகமாக முடிக்க ஏதுவாக மத்தியஸ்தரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு இன்றும் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்நிலையில் அயோத்தி பிரச்சினையில் மத்தியஸ்தர்களை நியமித்து இணக்கமான தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்தியஸ்தர்கள் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லாவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 நபர்கள் கொண்ட மத்தியஸ்தர் குழு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு மத்தியஸ்தர் குழுவில் உள்ளனர். மேலும் மத்தியஸ்தர் குழு செயல்பாடுகளை ரகசியமாக வைத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மத்தியஸ்தர் குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை 8 வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ayodhya ,Supreme Court ,mediators , Supreme Court, Land Acquisition, Ayodhya, Appeal, Mediators, Dispute Action
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு