×

காஷ்மீர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

ஜம்மு: காஷ்மீர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி நடத்திய தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், தீவிரவாதிகள் வேட்டையை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி உள்ளன. ஏராளமான தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் கொன்று வருகின்றன. இந்நிலையில், ஜம்முவில் தீவிரவாதிகள் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். ஜம்மு பேருந்து நிலையத்தில் நேற்றும் வழக்கம்போல் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால், பேருந்து நிலையம் பரபரப்பாக இருந்தது. அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் திடீரென பொதுமக்கள் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அதில், அப்பாவி மக்கள் 32 பேர் காயமடைந்தனர்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றும் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிழந்தார். இவர் உத்தரகாண்டில் உள்ள ஹரித்துவார் பகுதியை சேர்ந்த முகமது ஷாரிக் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளது. கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்திய  யாசிர் அகமது என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த அவர், அந்த இயக்கத்தின் தூண்டுதலின் பேரில் இந்த சதிச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.20,000 வழங்க காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : grenade bomb attack ,Kashmiri ,bus stand , Kashmir, bus Stand, grenade attack, kills
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை