×

வாட்ஸ் அப்பில் விமர்சிக்காதீங்க... தேமுதிக திடீர் சுற்றறிக்கை

விழுப்புரம்: யாரேனும் தலைமை கழகத்தைப் பற்றியோ, கூட்டணி குறித்தோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட வேண்டாம் என மாவட்ட செயலாளர்களுக்கு ேதமுதிக தலைமை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி தேமுதிக தலைமை திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவது அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக விழுப்புரம் மாவட்ட தேமுதிக வாட்ஸ்அப் குழுவில் பிரேமலதா, சுதீஷ் ஆகியோரை கடுமையாக விமர்சித்து தேமுதிக தொண்டர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதேபோல தமிழகமெங்கும் தேமுதிகவினர் கடும் விமர்சனம் செய்துவருவதை அறிந்த தேமுதிக தலைமை நேற்று முன்தினம் இரவு மாவட்ட செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில்,  `தங்களது மாவட்டத்தில் யாரேனும் தலைமை கழகத்தைப் பற்றியோ, கூட்டணி குறித்தோ சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவதை தடுக்கும் வகையில், தங்கள் மாவட்டத்தின் சார்பில் கண்டிக்கவேண்டும். நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துகொண்டிருகிறது. கூட்டணி பற்றிய தெளிவான ஒரு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக ஓரிரு நாளில் தலைமை கழகம் அறிவிக்கும்’ என கூறப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட தேமுதிக  செயலாளர் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் பேசியதாக ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில், `நான் விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பேசுகிறேன். தயவு செய்து விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிற தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நான் கேட்டுக்கொள்வது, கட்சி கூட்டணி சம்பந்தமாகவோ அல்லது கூட்டணிக்குழு சம்பந்தமாகவோ அல்லது கட்சியில் இருக்கிற மாநில நிர்வாகிகள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை யாராக இருந்தாலும் யாரைப்பற்றியும் விமர்சனம் செய்து பதிவு போடக்கூடாது.

கூட்டணி பேச்சுவார்த்தை குழுவாக இருந்தாலும், மாநில நிர்வாகிகளாக இருந்தாலும் மிகத்திறமையாக இந்த கூட்டணியை கையாண்டுகொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நீங்கள் தேவையில்லாத பதிவுகளை போட்டு சங்கடப்படுத்தக்கூடாது. இது என்னுடைய உத்தரவு. முகநூல், வாட்ஸ்அப்பில் பதிவுபோட்டிருந்தாலும் உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பேசியிருக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dmdk
× RELATED நமது முழக்கம் மூலம் பாஜகவை செயல்பட...