×

நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை செல்லாத நோட்டு டெபாசிட் 87,000 பேருக்கு கிடுக்கிப்பிடி: இம்மாதத்துக்குள் விசாரணை முடிக்க கெடு

புதுடெல்லி: செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட 87,000 டெபாசிட்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை தயாராகி வருகிறது. கருப்பு பணத்தை மீட்கும் நோக்கில், பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி அறிவித்தது. இதன்பிறகு இவற்றை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ள 50 நாள் அவகாசம் தரப்பட்டது. அளவுக்கு அதிகமாக டெபாசிட் செய்யப்பட்ட கணக்குகள் கண்காணிக்கப்பட்டது தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

 இந்த வகையில் சந்தேகத்துக்கு இடமாக பணம் டெபாசிட் செய்த 3 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதில் 87,000 பேர் 2017-18 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதை தொடர்ந்து, வருமான வரி பிரிவு 144ன்படி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. வருமான வரி கணக்கு, திருத்திய கணக்கு தாக்கல் செய்ய தவறியது, வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களுக்கு பதிலளிக்காமல் இருந்தது போன்றவற்றுக்கு இந்த சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதோடு, கடந்த நிதியாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்கள், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ஆகியவற்றை ஒப்பீடு செய்து உரிய கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட வழக்குகள் அனைத்திலும் நடப்பு நிதியாண்டுக்குள், அதாவது இந்த மாத இறுதிக்குள் தீர்வு காண வேண்டும். அல்லது எப்படிப்பட்ட வழக்காக இருந்தாலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இறுதி தீர்வு காண வேண்டும். சந்தேகத்துக்கு உரிய டெபாசிட்கள் மேற்கொண்ட தனிநபர், நிறுவனங்கள் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : depositors ,investigation , income tax
× RELATED பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை...