மக்களை எளிதாக சென்றடைய நடிகர்கள் மூலம் போலியோ விழிப்புணர்வு: அஜித், விஜய், சூர்யா எதிர்மனுதாரராக சேர்ப்பு

மதுரை: போலியோ விழிப்புணர்வை நடிகர்கள் மூலம் செய்தால் மக்களை எளிதில் சென்றடையும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மதுரையை சேர்ந்த ஜான்சிராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த உத்தவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாகவும், வரும் 10ம் தேதி கூட சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது தொடர்பாக, போதுமான விளம்பரங்கள் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், நடிகர்கள் மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள். அவர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும்போது அது எளிதாக மக்களை சென்றடையும் எனத் தெரிவித்து, தென்னிந்திய நடிகர் சங்கச்செயலர், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர். தொடர்ந்து செய்தித்தாள்கள், ஊடகங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து தொடர்பான விழிப்புணர்வை பிரபலப்படுத்தலாம் என கருத்து தெரிவித்து விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : actors ,Vijay ,Surya ,Ajith , Polio Awareness, Ajith, Vijay, Surya,
× RELATED மேகாலயாவில் பழங்குடியினர் மற்றும்...