×

தடை பட்டியலில் இருந்து நீக்கும் ஹபிஸ் சயீத் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா. சபை

புதுடெல்லி: தீவிரவாதிகள் தடை பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க கோரி, ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவன் ஹபிஸ் சயீத் விடுத்த வேண்டுகோளை ஐநா நிராகரித்தது. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத். இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்த அமைப்புக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி தடை விதித்தது. இதனால், ஹபிஸ் சயீத், பாகிஸ்தானில் இன்னும் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளான். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கியத் தலைவனாகவும் ஹபிஸ் சயீத் இருந்து வருகிறான்.

இந்நிலையில், தனது பெயரை தீவிரவாதிகள் தடை பட்டியலில் இருந்து நீக்கும்படி, ஐநா.வுக்கு பாகிஸ்தானில் உள்ள மிர்சா என்ற சட்ட நிறுவனம் மூலம் ஹபிஸ் சயீத் வேண்டுகோள் விடுத்தான். இதற்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு ஹபிஸ் சயீத் வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஹபிஸ் சயீத் பற்றிய அனைத்து தகவல்களையும் ஆராய்ந்த ஐநா. பாதுகாப்பு கவுன்சில் அவனது கோரிக்கையை நேற்று நிராகரித்தன. ஐநா குழு விதிக்கும் தடையை ஐநா.வின் உறுப்பு நாடுகள் பின்பற்ற வேண்டும். சொத்துக்கள் முடக்கம், பயண தடை, ஆயுத தடை போன்ற தடைகளை ஐநா.வின் 1267 குழு விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hafiz Saeed ,withdrawal ,UN Security Council House , UN, Hafiz Saeed,
× RELATED பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா,...