×

போர் குற்ற விசாரணை அதிபர் முடிவுக்கு எதிராக பிரதமர் ரணில் அறிக்கை : இலங்கையில் மீண்டும் பரபரப்பு

கொழும்பு: இலங்கையில் போர் குற்ற விசாரணை விவகாரத்தில் அதிபர் சிறிசேனாவின் முடிவுக்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் கடந்த 2009ல் நடந்த இறுதிகட்ட உள்நாட்டு போரில் 40 ஆயிரம் தமிழர்களை அந்நாட்டு ராணுவம் கொன்று குவித்தது. இதில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியது. கடந்த 2015ல்  இலங்கை அதிபராக பொறுப்பேற்ற மைத்ரிபால சிறிசேனா, தமிழர்கள் மறுவாழ்வு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டு, போர் குற்றம் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில், ஜெனீவாவில் வரும் 22, 23ம் தேதி ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 40வது கூட்டம் நடக்க உள்ளது. இதில், இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் பேட்டி அளித்த சிறிசேனா, ‘எங்கள் பிரச்னையை உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்ள ஐநா.விடம் முறையிட உள்ளோம். இதற்காக, தனி குழு அனுப்பி வைக்கப்படும்’ என, திடீரென தனது முடிவில் இருந்து பின்வாங்கினார். சமீபத்தில் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நிலவியதைத் தொடர்ந்து அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இடையே மோதல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நேற்று பிரதமர் அலுவலகமும், வெளியுறவுத் துறையும் இணைந்து கூட்டு அறிக்கை வெளியிட்டன. அதில், ‘ஐநா தீர்மானத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடரும். மறுவாழ்வு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது. அதிபரும், பிரதமரும் எதிரெதிராக அறிக்கை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranil ,war crimes trial , Prime Minister Ranil , against the end , war crimes trial
× RELATED மக்களின் ஆதரவு இருந்ததால் பொருளாதார...