×

வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய விவகாரம்: சந்தா கோச்சார் லஞ்சம் பெற்ற ஆதாரங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை தகவல்

புதுடெல்லி: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் 500 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. எஸ்பிஐ தலைமையிலான 20 வங்கிகளின் குழு வீடியோகான் குழுமத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியிருந்தது. இதில் ஐசிஐசிஐ வங்கி 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கியிருந்தது. இந்த கடனில் 2,810 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், வீடியோகான் தரவேண்டிய கடனை வாராக்கடன் என 2017ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கி அறிவித்தது. இந்த விவகாரத்தில், ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் சிஇஓ ஆக இருந்த சாந்தா கோச்சார் விதிகளை மீறியிருப்பதாகவும், இதற்கு கைமாறாக வீடியோகான் குழுமத்திடம் இருந்து மறைமுக வழிகளில் பல கோடி ரூபாய் பெற்றிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் மேலாண் இயக்குநர் வேணுகோபால் தூத் ஆகியோரின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை கடந்த சில தினங்களாக சோதியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸ், அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை என அனைத்து தரப்பிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் அமைத்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்னரே சிஇஓ பொறுப்பிலிருந்து சந்தா கோச்சார் விலகினார். இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு வழங்கிய பண பலன்களையும் திருப்பி வழங்குமாறு வங்கி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்காக சந்தா கோச்சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 500 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் சட்டத்திற்கு புறம்பாக கடன் வாங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே விரைவில் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Videocon ,Chanda Kochhar , ICICI, Chanda Kochhar, Bribery, Evidence, Enforcement Department
× RELATED ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ....