×

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது தேவாலயங்களில் சாம்பல் புதன் ஆராதனை

நெல்லை: கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியதை முன்னிட்டு சாம்பல் புதன் ஆராதனை தேவாலயங்களில் நடந்தது. பெத்லகேமில் பிறந்த ஏசு இறைப்பணியை தொடங்குவதற்கு முன்பாக உபவாசம் இருந்தார். அவரது சிலுவை பாடுகளை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் இருப்பர். இந்த 40 நாட்களும் தவக்காலம் அல்லது லெந்துநாட்கள் அல்லது கஸ்திநாட்கள் என அழைக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மாமிசம் உள்ளிட்ட உணவு வகைகள் சாப்பிடுவதை தவிர்த்து தங்களை வருத்திக் கொள்வர். ஒருவேளை உணவு மட்டுமே உண்பது, தான தர்மம் செய்வது, ஏழைகளுக்கு உணவு அளிப்பது போன்ற சடங்குகளை கடைப்பிடிப்பர். திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை. இந்த ஆண்டிற்கான தவக்காலம் நேற்று தொடங்கியதை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் காலையில் நடந்தன.

சாம்பல் புதனை முன்னிட்டு கடந்தாண்டு குருத்தோலை ஞாயிற்று கிழமைகளில் பயன்படுத்திய குருத்தோலைகளை எரித்து அதன் சாம்பலை பூசிக் கொண்டு ஆராதனைகளில் பங்கேற்றனர். கத்தோலிக்க ஆலயங்களில் குருத்தோலைகளை எரித்து அதன் சாம்பலை அனைவரது நெற்றியிலும் பங்கு தந்தையர்கள் பூசினர். பாளை சவேரியார் ஆலயத்தில் கத்தோலிக்க முன்னாள் பேராயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆராதனை நடந்தது. பேராலய பங்குதந்தை ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தவக்காலம் முழுவதும் மாலை நேரங்களில் ஆராதனை நடத்தப்படும். ஆலயங்களில் சிலுவைபாடு குறித்து தியானங்கள் நடைபெறும். வரும் ஏப்ரல் 19ம்தேதி அன்று ஏசு சிலுவையில் அறையப்பட்ட ‘புனித வெள்ளி’ அனுசரிக்கப்படுகிறது. தொடர்ந்து ஏப்ரல் 21ம் தேதி ஏசு உயிர்த்தெழுந்த ‘ஈஸ்டர் பண்டிகை’ கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் கடைப்பிடித்து வந்த கட்டுப்பாடுகள் ஈஸ்டர் பண்டிகையோடு நிறைவு பெறும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lenten ,Christians ,churches ,Ash Wednesday , Christians, Lent, started
× RELATED மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்துடன் சேர்க்க கோரிக்கை