×

பாகிஸ்தான் பெண்ணுடன் கணவர் 2வது திருமணம் 3 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விருதுநகர்: பாகிஸ்தான் பெண்ணை 2வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தாய், 3 மகள்களுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி தாயம்மாள் (32). கடந்த 2005ல் திருமணம் நடந்தது. காவியாஞ்சலி (13), கவிபாரதி (12), ஜெயபாரதி (7) என 3 மகள்கள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சண்முகவேல், 2018, செப்டம்பரில் ஊருக்கு வந்தார். அப்போது பாகிஸ்தான் நாட்டு பெண்ணையும் திருமணம் செய்து உடன் அழைத்து வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தாயம்மாள் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த சண்முகவேல் அவரை சரமாரியாக தாக்கினார்.

கடந்த ஜன. 27ம் தேதி இரவு கணவன், மாமனார், மாமியார், வெளிநாட்டு பெண் சேர்ந்து தாயம்மாளை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த தாயம்மாள் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து நரிக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் இன்ஸ்பெக்டர் உரிய நடவடிக்கை எடுக்காமல், சண்முகவேலுக்கு சாதகமாக நடந்ததாக தெரிகிறது.இதனால் விரக்தியடைந்த தாயம்மாள் நேற்று தனது 3 மகள்களுடன் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கணவன் மீது நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து, மகள்களுடன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். சூலக்கரை போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறித்தனர். சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistani ,daughters , Pakistan girl, 2nd marriage, mother tried to fire
× RELATED தாய் ஜிஞ்சர்!