தமிழகம் வளம் கொழிக்கும் பூமியாக உருவாக வேண்டுமென்றால் மோடி மீண்டும் பிரதமராக வர அனைவரும் உழைக்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி பேச்சு

சென்னை: தமிழகம் வளம் கொழிக்கும் பூமியாக உருவாக வேண்டும் என்றால் மோடி  மீண்டும் பிரதமராக வர அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று முதல்வர்  எடப்பாடி கூறினார். நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் பங்கேற்ற பொதுக்கூட்டம் சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து பாஜகவை ஆதரிக்கிறோம். தமிழகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது. அதன் காரணமாக 16 உயரிய விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பதில் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. சாலை உட்கட்டமைப்பு தமிழகத்தில் மிக சிறப்பாக இருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் சிறப்பான ஆட்சி நடைபெற்ற காரணத்தினால் விலைவாசி உயராமல் மக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் துவங்க உள்ளது. அதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விரைந்து செயல்படுத்த பிரதமர் உதவ வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் குறித்து பிரதமரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளேன். காவிரி தண்ணீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும். தமிழகத்தில் 25 லட்சம் சிறு, குறு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 14 லட்சம் பேருக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பணம் ரூ.2 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு வந்து சேர்ந்துள்ளது. வலிமை மிக்க பாரதத்தை உருவாக்க வேண்டும், நாட்டை காக்க வேண்டும் மோடி மீண்டும் பிரதமராக வர அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம், வெற்றி காணிக்கையை அவருக்கு அளிப்போம். 40 தொகுதியிலும் மிகப்பெரிய வெற்றியை தாருங்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>