×

கொடநாடு கொலை விவகாரம் சயான், மனோஜ் ஜாமீன் மனு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உதகை நீதிமன்றம் தங்களின் ஜாமீனை ரத்து  செய்ததை எதிர்த்து கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயான், மனோஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக தெகல்கா முன்னாள் ஆசியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டிருந்தார். இதில், அந்த சம்பவங்களில் தொடர்புடையதாக கூறப்படும் மனோஜ், சயான் ஆகியோர் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக பேட்டியளித்தனர். இருவரும் ஜாமீனில் உள்ளனர். இதையடுத்து, மனோஜ், சயான் ஆகியோரின்  ஜாமீனை ரத்து செய்யக்கோரி உதகை போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உதகை நீதிமன்றம் இருவரின் ஜாமீனையும் ரத்து செய்து கடந்த மாதம் 8ம் ேததி உத்தரவிட்டது. உதகை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சயான், மனோஜ் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி,
கொடநாடு கொலை வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையில் எதுவும் கூறாமல்  மாத்யூ சாமுவேலின் ஆவணப்படத்தில் முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது முதலமைச்சரை மிரட்டவும், அவரின் புகழை கெடுக்கவும் திட்டமிட்ட செயலாகும். சயான், மனோஜ் மீது அதிகாரிகளை மிரட்டியதாக கேரளாவில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் தற்போது இருவரும் நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவது போல் செயல்படுகிறார்கள். அதனால்தான் விசாரணை நீதிமன்றம் இருவரின் ஜாமீனையும் ரத்து செய்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அரசுத் தரப்பின் வாதம் ஏற்கப்படுகிறது என்று கூறி சயான், மனோஜ் ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanad ,Manoj ,Cyan , Kodanad murder case,Cyan, Manoj, bail plea dismissed,Court order
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.29-ம்...