2வது டி20ல் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

கவுகாத்தி: இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி,  கவுகாத்தி பர்சபாரா ஸ்டேடியத்தில் இன்று காலை 11.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 41 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 161 ரன் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, முன்னணி வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறியதால் தோல்வியைத் தழுவியது. தியோல் 8, கேப்டன் மந்தனா, ஜெமிமா தலா 2 ரன், அனுபவ வீராங்கனை மித்தாலி ராஜ் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி கட்டாயம் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா களமிறங்குகிறது.

அதே சமயம், தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்தும் வரிந்துகட்டுவதால், ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். இந்தியா: ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), மித்தாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிகியூஸ், தீப்தி ஷர்மா, டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பார்தி புல்மாலி, அனுஜா பாட்டீல், ஷிகா பாண்டே, கோமல் ஜன்ஸத், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லீன் தியோல். இங்கிலாந்து: ஹீதர் நைட் (கேப்டன்), டாமி பியூமான்ட், கேத்தரின் பிரன்ட், கேத் கிராஸ், பிரெயா டேவிஸ், சோபியா டங்க்லி, ஜார்ஜியா எல்விஸ், அலெக்ஸ் ஹார்ட்லி, ஏமி ஜோன்ஸ், லாரா மார்ஷ், நதாலியே ஸ்கிவர், அன்யா ஷ்ரப்சோல், லின்சி ஸ்மித், லாரென் வின்பீல்டு, டேனியல் வியாட்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மக்களின் பிரார்த்தனைக்கு பலனாக...