×

முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து

செயின்ட் லூசியா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த நிலையில், இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி கிராஸ் ஐலெட் டேரன் சம்மி தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் 6, கிறிஸ் கேல் 15 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த ஹெட்மயர் 14 ரன்னில் வெளியேற, 5 ஓவரில் 37 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து வெஸ்ட் இண்டீஸ் தடுமாறியது. ஓரளவு தாக்குப்பிடித்த டேரன் பிராவோ - நிகோலஸ் பூரன் இணை 64 ரன் சேர்த்தது. பிராவோ 28 ரன் எடுத்து ஜார்டன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கார்லோஸ் பிராத்வெய்ட் 6 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டானார். பேபியன் ஆலன் 8 ரன்னில் பெவிலியன் திரும்ப, அதிரடியாக விளையாடிய நிகோலஸ் பூரன் 58 ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி டாம் கரன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 7 ரன் எடுத்து கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. ஆஷ்லி நர்ஸ் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் டாம் கரன் 4, கிறிஸ் ஜார்டன் 2, ரஷித், டென்லி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ அதிகபட்சமாக 68 ரன் (40 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். டென்லி 30, பில்லிங்ஸ் 18, ஹேல்ஸ் 11 ரன் எடுத்தனர். ஜோ ரூட் (0), கேப்டன் மோர்கன் 8 ரன்னில் வெளியேறினர். டேவிட் வில்லி 1, டாம் கரன் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் காட்ரெல் 3, நர்ஸ், ஹோல்டர், பிராத்வெய்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஜானி பேர்ஸ்டோ ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி செயின்ட் கிட்ஸ், வார்னர் பார்க் மைதானத்தில் 9ம் தேதி நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : West Indies ,T20 match ,England , The first T20 match, West Indies' Down, England
× RELATED சில்லி பாயின்ட்…