×

குழித்துறை ரயில் நிலையம் அருகே சாலையோரம் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு :கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குழித்துறை உட்பட பல ரயில் நிலையங்கள் செயல்பட்டு வந்தாலும் இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. பல்வேறு கோரிக்கைகளுக்கு பின்னர், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் சில வளர்ச்சி பணிகளை மேற்கொண்டனர். இருப்பினும் குமரி மாவட்ட ரயில் நிலையங்கள் முன்னேறி செல்ல வேண்டிய நிலைகள் பல உள்ளன. திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளதால் இங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முயற்சி மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் குழித்துறை ரயில் நிலையம் அருகே பல்லன்விளை ரயில்வே கிராசிங் அருகே சாலையோரமாக பிளாஸ்டிக்  குப்பைகள், கழிவுகள் ஏராளம் தேங்கி உள்ளன.

தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்துள்ளபோதும், மாவட்டம் முழுவதும் இன்னும் இவை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் குவிந்து காணப்படுகிறது. இதுபோல பல்லன்விளை ரயில்வே கிராசிங் பகுதியிலும் பிளாஸ்டிக் குப்பைகள் ஏராளமாக குவிந்துள்ளன. தூய்மை இந்தியா திட்டம் என  கூறிக்கொண்டு மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மத்திய அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து இடங்களிலம் தூய்மை பராமரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் துறையான ரயில்வேதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள குழித்துறை ரயில் நிலைய பகுதி சுகாதார சீர்கேட்டால் துர்நாற்றம் வீசிவருகிறது. இங்கு சுகாதரம் பேண அதிகாரிகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

குமரி மாவட்டம் தவிர்த்து கேரள எல்லைக்கு சென்றால் அங்கு பாறசாலை  உட்பட அனைத்து ரயில் நிலையங்களும் மிகவும் சுத்தமாக, சுகாதாரமாக  பராமரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் குமரி மாவட்ட ரயில் நிலையங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவும், சுத்தமாக பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எந்தவிதத்தில் உடன்பாடானது என்ற கேள்வி எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா?

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kilithurai ,railway station , Kilippurai, Railway Station, Garbage, Health Disorder, Officers
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...