×

கோடைக்கு முன்பே கொளுத்தும் வெயிலால் வேகமாக பரவி வரும் அம்மை நோய்

சேலம் : தமிழகத்தில் நடப்பாண்டு கோடைக்கு முன்பே வெயிலின் அளவு அதிகரித்து வரும் நிலையில், அம்மை நோய்களின் தாக்கமும் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் நடப்பாண்டு கோடைக்கு முன்னதாகவே, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, இன்றும், நாளையும், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் அனல்காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் என்றாலே, பல்வேறு தொற்று நோய்களும், உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. இவற்றில் முதலிடம் பிடிப்பது அம்மை நோய்களாகும். நடப்பாண்டு கடந்த இருவாரங்களாக, வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்து காணப்படுவதால், ஏராளமானோர் அம்மை நோயால் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த அம்மை நோயானது ‘‘வேரிசெல்லா’’ என்ற வைரஸ் மூலம் ஏற்படும் தொற்றுநோயாகும். சின்னம்மை, தட்டம்மை, மணல்வாரி அம்மை, பொன்னுக்கு வீங்கி என அம்மை நோய்களை பல வகைப்படுத்தலாம்.

இந்நோய் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள, கோடை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பூங்கொடி கூறியதாவது, “அம்மை நோய்களில் சின்னம்மைதான் அதிகளவில் பரவுகிறது. ஏற்கனவே அம்மைநோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களின், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு எளிதில் பரவுகிறது. அவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் காற்றில் வைரஸ் பரவி அடுத்தவருக்கு பாதிப்பை உருவாக்குகிறது.

 திடீர் காய்ச்சல், உடலில் நமச்சல், கண்களில் எரிச்சல், தும்மல், கொப்பளங்கள் உண்டாதல், கன்னத்தில் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று, மருத்துவர்களின் பரிந்துரைப்படி “ஏசைக்ளோவிர்” என்ற மாத்திரையை உட்கொள்ள வேண்டும். இதனை விடுத்து பாட்டி வைத்தியம் என்ற பெயரில் சுயமாக சிகிச்சை மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அம்மை நோய் தாக்கம் அதிகரித்தால், நிமோனியா காய்ச்சல், நுரையீரல் தொற்று, மலட்டுத்தன்மை போன்ற விபரீத பாதிப்புகள் ஏற்படும். எனவே, உரிய நேரத்தில் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அனைத்து தரப்பினருக்கும் அம்மை பரவும் என்றாலும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, பெற்றோர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.’’ இவ்வாறு அவர் கூறினார்.

தானாக சரியாகும்  பருவகால நோய்

அம்மை நோயானது, பரம்பரையாக தொடரும் தொற்றுநோய் ஒன்றும் இல்லை. இவை பருவகாலத்தால் ஏற்பட்டு, தானாக சரியாகும் நோய்களாகும். இதனால், அம்மை நோய் தாக்குதலுக்குள்ளான பொதுமக்கள் யாரும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. மேலும், ஒருமுறை நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு, வேரிசெல்லா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடல் தானாக ஏற்படுத்திக்கொள்ளும். இதனால், அவர்களது வாழ்நாளில் மீண்டும் அம்மை நோய் வர வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்ய வேண்டியவை:


* அம்மைநோய் தாக்குதலுக்குள்ளானவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

*  அம்மை நோய் பாதித்தவர்களுக்கு நீரிழப்பு ஏற்படும். இதனை ஈடுகட்ட பால், நீர்மோர், இளநீர், தர்ப்பூசணி, பழங்கள் என நீர்ச்சத்து அதிகமுள்ள உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

*  கை கழுவுதல் போன்ற சுய சுத்தத்துடன், சுற்றுப்புறச்சூழலையும் தூய்மையாக வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

* நோய் பாதித்தவர்களை தனிமைப்படுத்துதன் மூலமும், பரவாமல் கட்டுப்படுத்த முடியும்.

*  கோடை காலம் முடியும் வரை முற்றிலும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

செய்யக் கூடாதவை:


* தவிர்க்க முடியாத நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

* நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பயன்படுத்திய, ஆடைகளை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.

* கொப்புளங்கள் உள்ள இடத்தில், நாட்டு வைத்தியம் என்ற பெயரில் எந்தவித இலைகளையும் அரைத்து பூசக்கூடாது.

* நெரிசல் மிகுந்த இடங்கள், அசுத்தம் நிறைந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Summer ,chicken pox ,salem
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...