×

குளத்தூர் அருகே தொடரும் அவலம் புதிய போர்வெல் அமைத்தும் தண்ணீர் இல்லை

குளத்தூர் : குளத்தூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் புதிய போர்வெல் அமைத்தும் தண்ணீர் இல்லாததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேப்பலோடை ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கடாசலபுரம், வேப்பலோடை கிராமங்கள். இங்குள்ள மக்களுக்கு வெங்கடாசலபுரம் நெடுஞ்சாலையோரம் உள்ள குளத்தின் உள்பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அருகிலேயே அமைக்கப்பட்ட தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தேக்கி, சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

 இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியதால் தண்ணீர் ஏற்ற  முடியாத நிலை உருவானது. இதனால் கிராம மக்கள் கடந்த 6 மாதங்களாக குடிநீரின்றி அவதிப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கோரிக்கையை ஏற்று வெங்கடாசலபுரம் குளத்து மேட்டுப் பகுதியில் புதிதாக 130 அடி ஆழத்தில் மற்றொரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதிலும் தண்ணீர் இல்லை.

 புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் போதே கூடுதலான ஆழத்தில் அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை அதிகாரிகள் ஏற்காததால் புதிய ஆழ்துளை அமைத்தும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து வெங்கடாசலபுரம், வேப்பலோடை கிராம மக்கள் கூறுகையில், ‘‘கடந்த 6 மாதங்களாக எங்கள் கிராமங்களில் குடிநீர் பிரச்னை பெரிதாக உள்ளது. இரு வாரங்களுக்கு ஒருமுறை வரும் சீவலப்பேரி குடிநீரும் போதுமான அளவு கிடைப்பதில்லை. இப்போதே கோடை காலம் துவங்கி விட்டதால் இனிவரும் தினங்களில் குடிநீர் கிடைப்பது அரிதாகிவிடும்.

எனவே, புதிதாக 200 அடிக்கும் ஆழமாக ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : borewell ,Koothur , kulathur,borewell , no water,farmers, drinking water
× RELATED பைக் மீது வேன் மோதி 3 மாணவர்கள் பலி