×

உச்சநீதிமன்ற வரலாற்றில் மிகவும் அரிதான நிகழ்வு...தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 6 பேர் விடுதலை!

புதுடெல்லி: கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றில் இது மிகவும் அரிதான நிகழ்வாகும். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கடந்த 2003ம் ஆண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்டது, கொள்ளை மற்றும் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது ஆகிய வழக்கில் பழங்குடியினர் 6 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட போது 2009ம் ஆண்டு 6 பேருக்கும் மரண தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவர்கள் 6 பேரும் சுமார் 16 ஆண்டுகள் சிறையில் இருந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை 10 ஆண்டுகளுக்கு பிறகு மறு விசாரணை செய்த உச்சநீதிமன்றம், முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைத்து, இதில் தொடர்பே இல்லாத 6 பேரை காவல்துறையினர் வழக்கில் சிக்க வைத்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 6 பேருக்கும் விதித்த மரண தண்டனையை திரும்பப்பெற்ற உச்சநீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் அப்பாவி பழங்குடியின மக்கள் மீது தவறான குற்றச்சாட்டை பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில தலைமை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, 6 பேருக்கும் மகாராஷ்டிர அரசு 4 வாரங்களுக்குள் தலா 5 லட்ச ரூபாய் நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல் நசீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : event ,Supreme Court ,death , Supreme Court, Execution, Liberation, Maharashtra
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...