×

கோஹ்லி 40வது சதம் விளாசினார் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக 2வது வெற்றி: ஆல் ரவுண்டராக அசத்தினார் விஜய் ஷங்கர்

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 8 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. அந்த அணியில் ஆஷ்டன் டர்னர், பெஹரண்டார்ப் நீக்கப்பட்டு ஷான் மார்ஷ், நாதன் லயம் இடம் பெற்றனர். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ஆடம் ஸம்பாவிடம் பிடிபட்ட ரோகித் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அடுத்து தவானுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். தவான் 21 ரன் எடுத்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அம்பாதி ராயுடு 18 ரன் எடுத்து லயன் சுழலில் பெவிலியன் திரும்பினார். இந்தியா 17 ஓவரில் 75 ரன்னுக்கு விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கோஹ்லி - விஜய் ஷங்கர் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

இருவரும் 4வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஷங்கர் 46 ரன் எடுத்து (41 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ஒரு முனையில் கோஹ்லி உறுதியுடன் போராட... கேதார் 11 ரன் எடுத்து ஸம்பா பந்துவீச்சில் பிஞ்ச் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த டோனி தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து பரிதாபமாக வெளியேறினார். அவர் 5வது முறையாக கோல்டன் டக் அவுட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, ஜடேஜா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க மறு முனையில் கோஹ்லி அபாரமாக விளையாடி ரன் சேர்த்தார். இருவரும் 7வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தனர். ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி தனது 40வது சதத்தை விளாசி அசத்த, ரசிகர்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஜடேஜா 21 ரன் எடுத்து (40 பந்து) கம்மின்ஸ் வேகத்தில் கவாஜா வசம் பிடிபட்டார்.
கோஹ்லி 116 ரன் (120 பந்து, 10 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்க, அடுத்து வந்த குல்தீப் யாதவ் (3), பூம்ரா (0) சொற்ப ரன்னில் வெளியேறினர்.

இந்தியா 48.2 ஓவரில் 250 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஷமி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ் 4, ஸம்பா 2, கோல்டர் நைல், மேக்ஸ்வெல், லயன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 251 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கேப்டன் பிஞ்ச், கவாஜா இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவரில் 83 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. பிஞ்ச் 37 ரன் (53 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), கவாஜா 38 ரன் (37 பந்து, 6 பவுண்டரி) எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷான் மார்ஷ் 16 ரன்னில் வெளியேற, அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 4 ரன் மட்டுமே எடுத்து குல்தீப் சுழலில் கிளீன் போல்டானார். ஆஸி. அணி 132 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாற, ஹேண்ட்ஸ்கோம்ப் - ஸ்டாய்னிஸ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்தது. ஹேண்ட்ஸ்கோம்ப் 48 ரன் எடுத்து (59 பந்து, 4 பவுண்டரி) ரன் அவுட்டானார்.

இதையடுத்து ஸ்டாய்னிஸ் - அலெக்ஸ் கேரி ஜோடி 6வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்க்க, ஆட்டம் பரபரப்பானது. கேரி 22 ரன் எடுத்து குல்தீப் சுழலில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார்.  கோல்டர் நைல் (4), கம்மின்ஸ் (0) அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப இந்திய அணியினர் உற்சாகம் அடைந்தனர்.
ஆஸி. வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 21 ரன் தேவைப்பட்டது. பூம்ரா வீசிய 48வது ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து அசத்தினார். இதனால் ஆஸி. 12 பந்தில் 20 ரன் எடுக்க வேண்டுய கட்டாயம் ஏற்பட்டது. அடுத்த ஓவரில் 9 ரன் கிடைக்க, கடைசி ஓவரில் 11 ரன் தேவை என ஆட்டத்தில் அனல் பறந்தது. ஷங்கர் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டாய்னிஸ் (52 ரன், 65 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), 3வது பந்தில் ஸம்பா (2) ஆட்டமிழக்க, ஆஸி. அணி 49.3 ஓவரில் 242 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. லயன் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் குல்தீப் 3, பூம்ரா, ஷங்கர் தலா 2, ஜடேஜா, கேதார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 8 ரன் வித்தியாசத்தில் வென்று 2-0 என முன்னிலை பெற்றது. ஒருநாள் போட்டிகளில் இந்தியா பெற்ற 500வது வெற்றி இது. மூன்றாவது போட்டி ராஞ்சியில் 8ம் தேதி நடக்கிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kohli ,win ,India ,round ,Vijay Shankar , Kohli, India, wins
× RELATED ராஜஸ்தானுக்கு 4வது வெற்றி: விராத் கோஹ்லி சதம் வீண்