×

பண்ருட்டி அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சகட்டம் அமைச்சர், எம்எல்ஏ ஆதரவாளர் அடுத்தடுத்து மறியல்: 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பண்ருட்டி: அமைச்சர் சம்பத், எம்எல்ஏ சத்யா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி இரு தரப்பு ஆதரவாளர்கள் பண்ருட்டியில் அடுத்தடுத்து நேற்று சாலை மறியிலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தில் நடந்த மருத்துவ முகாமில்  கலந்து கொள்ள கடலூர் எம்.பி. அருண்மொழிதேவன் நேற்று முன்தினம் வந்திருந்தார்.  அப்போது, அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்களும், அப்பகுதியை சேர்ந்தவர்களுமான ஒன்றிய செயலாளர் கந்தன் மற்றும் மாஜி  தொகுதி செயலாளர் ராமசாமி ஆகியோர்  எங்களுக்கு முறையாக அழைப்பிதழ் வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். இதனையடுத்து, பண்ருட்டி எம்எல்ஏ ஆதரவாளர்கள், அருகில் இருக்கும் புதுப்பேட்டை நாடாளுமன்ற தேர்தல் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

அப்போது  அமைச்சர், எம்எல்ஏ ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் முற்றி சரமாரி தாக்கி கொண்டனர். பின்னர் அமைச்சர் ஆதரவாளர்கள், புதுப்பேட்டை காவல்நிலையம்  அருகே எம்எல்ஏ சத்யா, அவருடைய கணவர் பன்னீர்செல்வத்தை  கைது செய்யக்கோரிமறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று  திடீரென பண்ருட்டி, அண்ணாகிராமம் உள்ளிட்ட  பல்வேறு பகுதியை சேர்ந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் மாஜி  நகரமன்ற தலைவர்  பன்னீர்செல்வத்தை கைது செய்யகோரி நான்குமுனை சந்திப்பில் மறியலில்  ஈடுபட்டனர். இதனால், 200 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் எம்எல்ஏ  ஆதரவாளர்கள் திடீரென ஊர்வலமாக வந்து நான்குமுனை சந்திப்பில் அமைச்சர்  ஆதரவாளர்கள் மீது வழக்கு பதியவேண்டும் என கோஷமிட்டு மறியல் செய்தனர். பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.  சாலை மறியல் செய்ததால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

இதுகுறித்து எம்எல்ஏ ஆதரவாளர்கள் கூறுகையில், `தொழில்துறை  அமைச்சர் சம்பத் தனது மகன் பிரவீனை களத்தில் இறக்கி அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவர், தான் வகித்துவரும்  மாவட்ட செயலாளர் பதவியை விட்டு விலகவேண்டும். நடந்த  சம்பவத்திற்கு அமைச்சர் மீது வழக்கு பதிய வேண்டும் என கோரிதான் மறியல் செய்தோம்’ என்றனர். இதேபோல் அமைச்சர் ஆதரவாளர்கள் கூறுகையில், `எம்எல்ஏ ஆதரவாளர்கள் அத்துமீறி புதுப்பேட்டை கட்சி  அலுவலகத்தில் நுழைந்து கட்சி நிர்வாகிகளை தாக்கி உள்ளனர். இச்சம்பவம்  எம்எல்ஏ சத்யா தூண்டுதலின் பேரில்தான் நடந்துள்ளது. எனவே  எம்எல்ஏ சத்யா, அவரது கணவர் பன்னீர்செல்வம் ஆகியோரை கைது  செய்ய வலியுறுத்தி சாலைமறியல் செய்து வருகிறோம்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : clash ,Panthuti ,minister ,MLA , Panruti, AIADMK, factional conflict
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்