ஏழைகளுக்கு தலா ரூ2 ஆயிரம் வழங்கும் திட்டம் திமுக புகார் மீது அரசிடம் விளக்கம் கேட்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் வழங்கும்  திட்டம் தொடர்பாக திமுக புகார் மீது தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்படும்  என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. அதன் நகல் சென்னை அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்காக காத்திருக்கிறோம். இது தமிழக அரசின் திட்டம் என்பதால் தமிழக அரசிடமும் திட்டம் பற்றிய விளக்கத்தை கேட்க இருக்கிறோம்.

இதுபோன்ற வழக்கு ஒன்றை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அளிக்கும் அறிவுரைகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம். தமிழகத்தில் இதுவரை நடந்த இரண்டு சிறப்பு முகாம்கள் மூலம் 7 லட்சம் அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்ப்புக்காக மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. பெயர் நீக்கம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு கொடுத்து 7 நாட்கள் கால அவகாசம் தந்த பிறகுதான் அதை முடிவு செய்வோம். தாசில்தார்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்தால், அந்த மாவட்டத்தைப் பற்றி சரிவர தெரியாத அவர்களால் முழு அளவில் தேர்தல் பணியாற்ற முடியாது என்று வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் அந்த துறை தொடர்பான சங்கத்தினர் கூறியுள்ளனர். இதுபற்றியும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்காக அனுப்பி இருக்கிறோம்.

தேர்தலின்போது பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில்  வேட்பாளர்கள் மற்றும் பலரையும் பற்றிய தகவல் போடப்படுவதுண்டு. இதில் அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டால், அது அவதூறுதானா என்று முடிவு செய்வதற்காக மதிப்பீடு செய்யும் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அந்த தகவல் அவதூறுதான் என்று முடிவு செய்யப்பட்டால் அதை அந்த வலைதளத்தில் இருந்து நீக்குவதற்கு அந்த நிறுவனங்களுக்கு இந்திய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்யும். இதுகுறித்து பல்வேறு வலைதளங்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தலையிட முடியாது

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தொகுதிகளில் வாக்காளர்களுக்கு  பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினால், இதில் நாங்கள்  இப்போது தலையிட முடியாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். அதன்பிறகுதான் நாங்கள் நடவடிக்கைகளை எடுக்க  முடியும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>