×

அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை அறையில் வீடியோ பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை : அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை அறையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று 2008-ம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல்

மதுரையை சேர்ந்த வக்கீல் அருண்சுவாமிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் தான் வழக்கு விசாரணை நடக்கிறது. பிரேத பரிசோதனை நடந்த அன்றைய தினமே அதன் அறிக்கையை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்ய  வேண்டுமென்பது விதி.

ஆனால், இந்த விதியை யாரும் பின்பற்றவில்லை. பரிசோதனையின் போது முறையான கருவிகளை பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் டாக்டர்களுக்கு பதிலாக உதவியாளர்களே பிரேத பரிசோதனை செய்கின்றனர். பிரேத பரிசோதனையின்போது டாக்டர்களுடன் இருந்து அறிக்கை தயாரிக்கும் விஞ்ஞான அலுவலர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன. தமிழகத்தில் 3 விஞ்ஞான அலுவலர்கள் மட்டுமே  உள்ளனர். இவர்களால் குற்றம் நடந்ததற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும்.

இதுபோன்ற குறைகளால்தான் மறுபிரேத பரிசோதனை செய்தல், குற்றவாளிகள் தப்பித்தல், வீடியோ காட்சி பதிவு செய்தல் போன்றவை தேவைப்படுகிறது. எனவே, அனைத்து பிரேத பரிசோதனை அறைகளிலும் வீடியோ கேமரா பொருத்தவும், விஞ்ஞான அலுவலர்களை பணிக்கு நியமிக்கவும்,  இவர்கள் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை தயாரித்து, வீடியோ காட்சிகளுடன் அன்றைய தினமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை  நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு விசாரணை செய்து வருகிறது.

வீடியோ பதிவு செய்ய உத்தரவு

இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை அறையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று 2008-ம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  இவ்வழக்கில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வரை எதிர்மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளுக்கான மூத்த தடவியல் நிபுணர் நேரில் ஆஜராகும்படி உயர்நிதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்த நிலையில், வழக்கை உயர்நீதிமன்றம் மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madras ,post mortem room ,High Court , Video recording, petition, filing, postmortem, criminals
× RELATED 1995க்கு பிறகு தொடக்கப்பள்ளி தலைமை...