×

உலகில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலின் முதல் 10 இடங்களில் 7 இந்திய நகரங்கள்..: முதலிடத்தில் குருகிராம்!

புதுடெல்லி: உலகில் காற்று மாசு அதிகம் கொண்ட நகரங்கள் பட்டியலின் முதல் 10 இடங்களில் 7 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ள நிலையில், குருகிராம் முதலிடத்தை பிடித்துள்ளது. உலகம் முழுவதும் மாசுக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் க்ரீன் பீஸ் அமைப்பு ஏர் விஷுவா உடன் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த முடிவு தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள முதல் 10 நகரங்களில் 7 மற்றும், முதல் 30 நகரங்களில் 22 நகரங்கள், இந்திய நகரங்கள் ஆகும் என்பது கவலை தரும் அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில், குருகிராமை தொடர்ந்து காசியாபாத் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், ஃபரிதாபாத், பிவாடி, நொய்டா, பாட்னா மற்றும் லக்னோ ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

இதைத்தவிர சீனாவின் ஹோடான் நகரமும், பாகிஸ்தானில் உள்ள லாகூர் மற்றும் பைசலாபாத் ஆகிய நகரங்களும் முதல் 10 இடங்களில் உள்ளன. அதேபோல், உலகின் மாசுபடிந்த தலைநகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும், டாக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆனால், கடந்தாண்டு அதிக இடங்களைப் பிடித்திருந்த சீன நகரங்கள் இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் தலைநகர் பெய்ஜிங் இந்தப்பட்டியலில் 2013ல் முதன்மையாக இருந்த நிலையில் தற்போது, பெய்ஜிங்கில் காற்று மாசு 40 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 3,000 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் 64 சதவீத நகரங்கள் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள காற்று மாசு அளவைக் குறிப்பிடும் பிஎம் 2.5க்கும் மேலாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cities ,Indian ,world ,destinations , Air pollution, Indian cities, Gurugram , Delhi
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...