×

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசை என தகவல்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bjp.org முடக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பரப்புரை நடத்த உள்ள நிலையில் இணையதளம் முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கி ஹேக்கர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் பிரதமர் மோடியை நக்கல் செய்யும் மீம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்களை கவர அனைத்து தரப்பினரும் இணையதளங்கள் மூலமே தங்களை வளர்த்து வருகின்றனர். குறிப்பாக அரசியல் கட்சிகள் மக்களிடையே எளிதில் சென்றடைய இணையதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் பாஜகவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்தல் வாக்குறுதிகள், சாதனைகள் என பல்வேறு தகவல்கள் பதிவிடப்பட்டிருந்தது.

மேலும் புல்வாமா தாக்குதல் குறித்தும், இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதல் குறித்தும் அதிகமாக தகவல்கள் வெளியாகி வந்தன.  நாடாளுமன்ற தேர்தலுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோர் செயல்படுத்தி வந்த பல்வேறு நிகழ்வுகள் இந்த இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இணையதளம் முடக்கப்பட்டிருப்பது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இணையதளத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், தேசதந்தை காந்தியை விமர்சித்த இந்து மகாசபாவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை சில வாரங்களுக்கு முன்பு ஹேக்கர்கள் முடக்கியது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bharatiya Janata Party ,Hackers , BJP website, freezing, hackers
× RELATED பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப்