×

சூளகிரி அருகே கடும் வறட்சியால் கால்நடைகளுக்கான பாத்தி நீரை குடிநீராக பயன்படுத்தும் மக்கள்

சூளகிரி: சூளகிரி தாலுகா கொழும்பூர் கிராமத்தில், வறட்சி காரணமாக கடும் தண்ணீர்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள், விவசாய நிலத்தில் கால்நடைகளுக்கு தேக்கி  வைத்துள்ள பாத்தி தண்ணீரை எடுத்து வந்து குடிநீராக பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா கொழும்பூர் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சீரான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், 6 மாதங்களுக்கு முன் சூளகிரி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், ஊரின் நடுவில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து, அதில் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை நிரப்பி, வாரம் ஒருமுறை 3 குடம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது, ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் முற்றிலுமாக இல்லை. ஒகேனக்கல் கூட்டு குடிநீரும் வாரம் 2 குடம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

மேலும், விவசாய நிலத்தில் கால்நடைகளுக்கு தேக்கி வைத்துள்ள பாத்தியில் உள்ள தண்ணீரை எடுத்து வந்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். வறட்சி காரணமாக, ஒரு சில விவசாய கிணறுகளின் உரிமையாளர்கள் தண்ணீர் எடுக்க விடுவதில்லை. இதனால், கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருன்றனர். இதுகுறித்த புகார் மனுக்களை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். எநவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், மறியல் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Suluggery , Culakiri, drought, animal
× RELATED சூளகிரி அருகே நாய்களிடம் சிக்கிய புள்ளிமான் மீட்பு