×

சவால்கள் இன்னும் முடியவில்லை, படைகளை தயாராக வைத்திருங்கள் : பாகிஸ்தான் படையினரிடம் ராணுவ தளபதி அறிவுறுத்தல்

இஸ்லாமாபாத் : சவால்கள் இன்னும் முடியவில்லை என்றும் பதில்கள் கொடுக்க தயாராக இருங்கள் என்றும் பாகிஸ்தான் படையினரிடம் அந்நாட்டின் ராணுவ தளபதி கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலக்கோட்டில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி அழித்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து , பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றன.

இதனை விரட்டி சென்றபோது இந்திய விமானி அபிநந்தன் சென்ற விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. பாராசூட் மூலமாக தப்பிய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் அந்நாட்டு ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். கடந்த 28ம் தேதி நடந்த நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். மேலும் அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாகவும், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு முதல்கட்ட நடவடிக்கை இது என்றும் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்தது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை தளபதி முஜாகித் அன்வர் கான், எல்லைப்புற ராணுவ முகாம்களுக்கு நேரில் சென்று விமானப்படை வீரர்களையும் ஊழியர்களையும் சந்தித்து பேசினார். சமீபத்திய மோதலின் போது நாட்டின் இறையாண்மையை பாதுக்காக்க பாகிஸ்தான் விமானப்படை சிறப்பாக செயல்பட்டது என்றும் அதற்காக விமானப்படையை நினைத்து நாடு பெருமைப்படுகிறது என்று பாராட்டி உள்ளார்.

மேலும் சவால்கள் இன்னும் முடியவில்லை, படைகளை தயாராக வைத்திருங்கள் என்றும் எதிரியிடம் இருந்து அத்துமீறல் ஏதும் உருவானால் பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார். அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்து விட்டாலும் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியா நடத்தியது போன்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒன்றை பாகிஸ்தான் மீது நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : troops ,army commander ,Pakistani , Challenges, Jammu and Kashmir, Pulwama, terrorists, Pakistan
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...