×

மகளிர் கிரிக்கெட்: முதல் டி20 போட்டி: 41 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

கவுகாத்தி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடனான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 41 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. பரசபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா முதலில் பந்துவீச முடிவு செய்தார். இங்கிலாந்து தொடக்க வீராங்கனைகளாக டேனியல் வியாட், டாமி பியூமான்ட் களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 11.2 ஓவரில் 89 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். வியாட் 35 ரன் எடுத்து ஷிகா பாண்டே பந்துவீச்சில் மந்தனா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த நதாலியே ஸ்கிவர் 4 ரன் மட்டுமே எடுத்து ராதா பந்துவீச்சில் பூனம் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, பியூமான்ட்டுடன் இணைந்த கேப்டன் ஹீதர் நைட் அதிரடியில் இறங்க, இங்கிலாந்து ஸ்கோர் வேகம் எடுத்தது. பியூமான்ட் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்தது. ஹீதர் நைட் 40 ரன் (20 பந்து, 7 பவுண்டரி), பியூமான்ட் 62 ரன் (57 பந்து, 9 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர். இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. பிரன்ட் 4, வின்பீல்டு 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ராதா யாதவ் 2, ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து சரிவை சந்தித்தது. ஹர்லீன் தியோல் 8, கேப்டன் மந்தனா 2, ஜெமிமா ரோட்ரிகியூஸ் 2, மித்தாலி ராஜ் 7, வேதா கிருஷ்ணமூர்த்தி 15 ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா 10 ஓவரில் 46 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

அருந்ததி ரெட்டி 18 ரன் எடுத்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே கடுமையாகப் போராடியும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து அவர்களால் ரன் குவிக்க முடியவில்லை. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன் மட்டுமே சேர்த்து 41 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தீப்தி 22 ரன், ஷிகா பாண்டே 23 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் பிரன்ட், லின்சி ஸ்மித் தலா 2, ஷ்ரப்சோல், கிராஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பியூமான்ட் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி கவுகாத்தியில் 7ம் தேதி நடக்கிறது,


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,T20 match ,England ,win , Women's cricket, T20 match, England, India
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...