×

6ம் தேதி விருதுநகர் பேரணி வெற்றிக்கு கட்டியம் கூறும் ஜனநாயகம் என்ற ஆயுதம் கொண்டு எதிரணிகளை விரட்டியடிப்போம் : மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மனசாட்சியை விற்றுவிட்டு அதற்கொரு விலைவைத்து கூட்டணி வைத்துள்ளவர்களை ஜனநாயகம் என்ற ஆயுதம் கொண்டு விரட்டியடிப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவை 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜ கூட்டணியின் கொடுங்கோன்மை ஆட்சியில் நாடு பட்டபாட்டிலிருந்து மீட்கவும், அந்த கொடுங்கோல் ஆட்சிக்கு அடிமைச் சேவகம் செய்து தமிழ்நாட்டையே அடமானம் வைத்து, இன்று அவர்களுடனேயே கூட்டணி கண்டுள்ள அதிமுக ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டின் மானத்தை மீட்டு, அதல பாதாளத்திலிருந்து விடுவிக்கவும் ஜனநாயகக் களமான மக்களவைத் தேர்தல், திமுக செயல்வீரர்களைப் பட்டாளத்துச் சிப்பாய்களாக மாற்றியிருக்கிறது. இரண்டு ஆட்சியாளர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி விருதுநகரில் மார்ச் 6ம் நாள் நடைபெறவிருக்கிறது. ‘மார்ச்’ என்ற ஆங்கிலத் சொல்லுக்கு வீறுநடை என்பதே பொருளாகும். ஆறு போல பெருக்கெடுக்கும் வீறுநடையை மார்ச் 6ல் விருதுநகரில் காட்டிடவும், அதனை வெற்றி நடையாக மாற்றிடவும் கலைஞரின் தொண்டர்களை உங்களின் ஒருவனான நான் அன்புடன் அழைக்கிறேன். விருதுநகரில் உங்களில் ஒருவனாக என்னையும் வரவேற்றிட, விருதுநகர் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆயத்தமாக இருக்கிறார்கள். திமுக தனது தோழமை சக்திகளுடன் இணைந்து காணப்போகும் மகத்தான வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் விருதுநகர் பேரணி அமையப் போகிறது.  பொதுமக்களும் பங்கேற்கும் பெரும் பேரணியை விருதுநகர் தனது வரலாற்றுப் பக்கங்களில் மார்ச் 6ம் நாள் பதிய வைக்கப் போகிறது. திமுகவும், காங்கிரசும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு செய்து கொண்ட நிலையில், தோழமைக் கட்சியினருடனான இணக்கமான உடன்பாடு விரைந்து நிறைவேற உள்ளது. இது ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற, சிறுபான்மை நலன் காக்கின்ற, ஒடுக்கப்பட்டோர் உரிமையைப் பாதுகாக்கின்ற, யாரையும் ஒதுக்கி வைக்காத, எல்லோருக்குமான சமத்துவத்தை வலியுறுத்துகிற கொள்கைக் கூட்டணி. மக்கள் கூட்டணி, வெற்றிக் கூட்டணி.

எதிர்ப்புறம் இருப்பவர்களைப் பாருங்கள். மிரட்டலுக்குப் பயந்து கூனிக் குறுகி கூட்டணி சேர்ந்தவர்கள், நேற்று வரை நாராச நடையில் விமர்சித்துவிட்டு இன்று மனசாட்சியை விற்றுவிட்டு அதற்கொரு விலை வைத்து கூட்டணி கண்டவர்கள். எது பற்றியும் கவலையின்றி சுயநல எதிர்பார்ப்புகளையே முதலீடாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள் என ஒட்டுமொத்த மக்கள் விரோதக் கூட்டமும் ஒன்று சேர்ந்து வரிசையாக நிற்கிறது. தங்களை விற்றுக்கொண்டதுபோல மக்களையும் விலைக்கு வாங்கிவிடலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் பணநாயக மமதையை ஜனநாயக ஆயுதம் கொண்டு விரட்டிட, ஆட்சி மாற்றத்தை உறுதி செய்திட, வெற்றிக்கு கட்டியம் கூறிட விருதுநகரில் திரண்டிடுவோம். 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21, 22 தேதிகளில் தென்மண்டல திமுக மாநாடு இதே விருதுநகரில் நடைபெற்றது. இப்போது போலவே அப்போதும் மக்களவைத் தேர்தல் நேரம். தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற தருணம். அந்த பரபரப்பான சூழலிலும் திமுகவின் தென்மண்டல மாநாடு விருதுநகரில் நடைபெற்றது.  அந்த மகத்தான தென் மண்டல மாநாட்டுக்குப் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை வென்று, நாட்டின் வரலாற்றில் சாதனைப் பொன்னேட்டை இணைத்தது. அப்போதும் மாநிலத்தை ஆட்சி செய்த அதிமுகவும் மத்தியில் ஆட்சி செய்த பாஜவும் இப்போது போலவே கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

அப்போது தமிழ்நாட்டு மக்கள் எப்படி நாற்பது தொகுதிகளிலும் இரண்டு ஆட்சியாளர்களையும் வீழ்த்தி, மத்தியில் ஆட்சி மாற்றத்தையும் அதனைத் தொடர்ந்து மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தையும் உருவாக்கிக் காட்டினார்களோ, அதே வரலாறு இந்த மக்களவைத் தேர்தலிலும் உறுதியாகத் திரும்பும். ஒன்று கூடிடுவோம். விருதுநகரில் ஒலிக்கப்போகும் ஜனநாயகப் போர் முரசம்  நாற்பது தொகுதிகளுக்குமான வீர முரசம், அதுவே வெற்றி முரசம்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rally ,MK Stalin ,Virudhunagar , Virudhunagar rally, 6th,weapon of democrac
× RELATED அர்ஜெண்டினாவில்...