×

பண்ருட்டி அருகே பதற்றம் அமைச்சர் சம்பத், எம்எல்ஏ சத்யா ஆதரவாளர்கள் கோஷ்டி மோதல் : 2 பேர் படுகாயம்: எம்பி கார் முற்றுகை-சேர்கள் உடைப்பு

பண்ருட்டி,  மார்ச் 5: பண்ருட்டி அருகே அமைச்சர் எம்.சி. சம்பத், எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே நேற்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், பண்ருட்டி  எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்துக்கும் இடையே அடிக்கடி அரசியல்  மற்றும் திட்டப்பணிகள் சம்பந்தமாக பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் அமைச்சர்  கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ ஆதரவாளர்கள் புறக்கணிப்பு செய்தும்  வருகின்றனர். சில மாதத்துக்கு முன் மேல்குமாரமங்கலத்தில் பாலம் கட்டும்  பணிக்கான பூமி பூஜை விழாவில் இருதரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். தொடர்ந்து எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவிலும் பண்ருட்டியில் இருவரும் தனித்தனி  கோஷ்டியாக பிரிந்து மாலை அணிவித்து வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்ட அதிமுகவில் பெரும்  குழப்பம் நிலவுகிறது.  இந்நிலையில் நேற்று பண்ருட்டி அருகே ஒறையூர்  அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில்  கலந்து கொள்ள கடலூர் எம்பி அருண்மொழித்தேவன், பண்ருட்டி எம்எல்ஏ  சத்யாபன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி காரில் வந்தனர். அங்கிருந்த  அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்களான ஒன்றிய செயலாளர் கந்தன், முன்னாள் தொகுதி  செயலாளர் ராமசாமி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் கனகராஜ் மற்றும் சிலர் திடீரென எம்பி காரை முற்றுகையிட்டனர். எங்களுக்கு அழைப்பிதழை கொடுக்காமல் எப்படி விழா நடத்தலாம் என கேள்வி எழுப்பினர். இதற்கு எம்பி அருண்மொழித்தேவன் அதுபற்றி விசாரிக்கிறேன், முதலில் விழாவுக்கு வாருங்கள் எனக் கூறி அழைத்தார்.  ஆனால் யாரும் செல்லவில்லை.

இந்நிலையில் எம்பியின் கார் முற்றுகையிடப்பட்ட தகவலறிந்த  டிஎஸ்பி நாகராஜன் மற்றும் போலீசார் வந்து  கூட்டத்தை கலைந்து போக செய்தனர். இதையடுத்து எம்எல்ஏ ஆதரவாளர்கள் தொரப்பாடியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக  புதிதாக துவங்கப்பட்ட அமைச்சரின் ஆதரவாளர் அலுவலகத்துக்கு சென்றனர்.  அங்கு ஒறையூரில் நடந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக  தாக்கிக்கொண்டனர். இதில் அமைச்சர் ஆதரவாளரான முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமியின்  சட்டை கிழிக்கப்பட்டது. எம்எல்ஏ ஆதரவாளர்களான ராஜா, புகழ் ஆகியோர் காயமடைந்து  பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அலுவலகத்தில் இருந்த சேர்கள் தூக்கி வீசப்பட்டு உடைக்கப்பட்டன. இதையடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் கும்பலாக  புதுப்பேட்டை காவல்நிலையம் சென்று தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என புகார் செய்தனர். இதேபோல் எம்எல்ஏ ஆதரவாளர்களும் ஆன்லைனில்  புதுப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் மாறிமாறி  தாக்கிக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிருக்கு ஆபத்து


முன்னாள் அதிமுக தொகுதி செயலாளர் ராமசாமி போலீசாரிடம் கூறும் போது, தற்போது நடந்த சம்பவத்தை பார்க்கும் போது என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆகையால் எனக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால் என்னை அடித்தே கொன்றுவிடுவார்கள். இதற்கு எம்எல்ஏ ஆதரவாளர்களே முழுவதும் காரணம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sampath ,MLA ,supporters ,Sadhya ,Panrutti ,car crash-breaks , Sampath, MLA, Sadhya supporters ,clash over Panthti
× RELATED காஞ்சி தொகுதியை கைப்பற்ற அதிமுகவில் போட்டா போட்டி