×

நீதிமன்றம் தானாக முன்வந்து நிர்மலாதேவிக்கு ஏன் ஜாமீன் வழங்கக்கூடாது? : ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: ஓராண்டுக்கும் மேலாக  சிறையில் உள்ள  பேராசிரியை நிர்மலாதேவிக்கு, நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் ஜாமீன் வழங்கக்கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலர் சுகந்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவி சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. பல்கலைக்கழக பதிவாளர், வேந்தர், துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் உயரதிகாரிகள் என்ற பட்டியலுக்குள் வரும் நிலையில், அந்த உயரதிகாரி யார் என கூறவோ, அவர்களிடம் விசாரிக்கவோ இல்லை.   எனவே நிர்மலாதேவி வழக்கை  சிபிஐக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இம்மனு மீது ஏற்கனவே நடந்த விசாரணையின்போது, திருவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘சிபிசிஐடி முறையாக விசாரிக்கவில்லை. நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரை மட்டும் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் முன்பாக ரகசிய வாக்குமூலமான 164ன் கீழான வாக்குமூலம் பெறப்படவில்லை’’ என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், ‘‘ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள நிர்மலாதேவிக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் ஜாமீன் வழங்கக்கூடாது? அவ்வாறு ஜாமீன் வழங்கினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏதேனும் உள்ளதா?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘அவரது உயிருக்கு ஆபத்தில்லை. ஐகோர்ட் தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையிலேயே, கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்குவதில் அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை’’ என தெரிவித்தார். விசாரணை அதிகாரியான சிபிசிஐடி எஸ்பியிடம் சில விளக்கங்களை பெற வேண்டியது உள்ளது. அந்த விசாரணை தனி அறையில் நடைபெறும் என கூறிய நீதிபதிகள், வழக்கை மார்ச் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,Nirmaladevi ,Supreme Court of Justice ,Judge , court ,bail, Nirmaladevi
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...