×

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என தகவல்

பாகிஸ்தான்: புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14ம் தேதி தற்கொலைப் படைத் தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் நிகழ்த்தியது. அதில், 44 துணை ராணுவப்படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூரச் சம்பவத்திற்கு காரணமான தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக விளங்கும் மசூத் அசாரை, தொடர்ந்து தன் பாதுகாப்பிலேயே பாகிஸ்தான் வைத்திருந்தது. இந்த நிலையில், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள மசூத் அசார், பாகிஸ்தானில் உள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில், மசூத் அசார் உண்மையிலேயே உயிரிழந்துவிட்டானா? என்பதை உறுதிச்செய்யும் பணியில், உளவுத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மசூத் அசாரை ஒப்படைக்க இந்தியா பலமுறை வலியுறுத்தியபோதும், தங்கள் நாட்டிலேயே இல்லை என்று கூறிவந்த பாகிஸ்தான், தற்போது, மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறான் என்றும், சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்றதையும் ஒப்புக் கொண்டிருக்கிறது. இருப்பினும், அவன் உயிரோடு இருக்கிறானா?, இல்லையா? என்பதை பாகிஸ்தான் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதனிடையே, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பட்டியலிட வேண்டும் என, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவிக்காது எனத் தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளின் வலியுறுத்தல்படி மசூத் அசார், சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டால், எந்த ஒரு நாட்டிற்கு அவன் பயணம் செய்யத் தடை விதிக்கப்படுவதோடு, அவனது சொத்துக்கள் முடக்கப்பட்டு, ஆயுதங்கள் கொள்வனவும் முற்றாக முடக்கப்படும்.

இதனிடையே, மசூத் அசார் உயிரிழந்துவிட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், அவன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைத்து மசூத் அசாருக்கு சிகிச்சை அளித்து வந்த பாகிஸ்தான் அரசு தனது செயல்பாடுகள் அம்பலப்பட்டுபோனதால், உடனடியாக, அவனது இருப்பிடத்திற்கே அனுப்பி வைத்து விட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, மசூத் அசாரை பாதுகாத்து வந்த புகாரில் சிக்கிய பாகிஸ்தான் அரசுக்கு, அவனுக்கு சிகிச்சை அளித்து வந்ததன் மூலம் மேலும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. இதனால், ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து, ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைமை பீடம் அமைந்துள்ள பஹவல்பூருக்கே அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்துப்போயுள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவிடம் அடிபணிந்துவிட்டதாக கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : opposition ,Pakistani ,Masood Asar , Masood Azhar,Pakistan,International terrorist,Jaish-e-Mohammed
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...