×

பாலகோட் தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் உயிரிழந்தனர் : ப.சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி

சென்னை : பயங்கரவாதிகளின் முகாம்கள் மீதான இந்திய விமானப்படை தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய குடிமகன் என்ற முறையில் அரசை தான் நம்புவதாகவும் ஆனால் உலகம் நம்பவேண்டுமே என சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் வினவியுள்ளார். விமானப்படை தாக்குதல் தொடர்பாக ஆதாரம் கேட்பதா என பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்த நிலையில், ப. சிதம்பரம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளார். பயங்கரவாதிகளின் முகாம்கள் மீதான தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றி விமானப்படையின் துணை தளபதி கருத்து கூற மறுத்துவிட்டதை சுட்டி காட்டியுள்ள ப.சிதம்பரம், பாலாகோட் தாக்குதலில் 300 முதல் 350 வரை உயிரிழந்தார்கள் என்ற செய்தியை பரப்பியது யார் என்று வினவியுள்ளார். மேலும் இந்திய விமானப்படையின் வீர நடவடிக்கையை பாராட்டிய முதல் மனிதர் ராகுல் காந்தி என்பதை பிரதமர் நரேந்திர மோடி மறந்துவிட்டார் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் கூறிய கருத்து, பதற்றத்தை தணிக்கும் : வைகோ

இந்நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து ப.சிதம்பரம் கூறிய கருத்து, பதற்றத்தை தணிக்கும் விதமாக உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும்  கொத்தடிமையாக செயல்படும் அதிமுக அரசை மீட்க மோடி எந்த எல்லைக்கும் செல்வார் என்றும் விமர்சித்தார்.பாலாகோட் தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள், கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அறிவிக்கும் கடமை மத்திய அரசுக்கு உள்ளதாக ப.சிதம்பரம் கூறியதை சுட்டிக் காட்டிய அவர், இது தொடர்பாக பிரதமர் மோடியும் அரசியல் கட்சி தலைவர்களும் யோசிக்க வேண்டும் என கூறினார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : terrorists ,attack ,Balakot ,P. Chidambaram , Terrorists and camps, Narendra Modi, prime minister
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...