×

இறுதி ஊர்வலத்தில் கூட இம்சையை சந்திக்க வேண்டிய அவலம்: மேம்பாலத்தால் துண்டிக்கப்பட்ட பிச்சாண்டார் கோவில் கிராமம்

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் அமைந்துள்ள ரெயில்வே மேம்பாலத்தால் கிராம மக்கள் அன்றாட பணியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். இறுதி பயணம் செல்லும்போது கூட மேம்பாலத்தை சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை அமைத்து தருவதாக எம்பி அளித்த  வாக்குறுதி காற்றில் பறந்ததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சிகளில் மக்கள் தொகை அதிகம் கொண்ட கிராமம் பிச்சாண்டார்கோவில் ஊராட்சியாகும். பெயரில்தான் ஊராட்சி ஆனால் இங்கு நூற்றுக்கணக்காக அபார்ட்மென்ட்கள், ரயில்வே மேம்பாலம், ரெயில் நிறுத்தம் என்று மாநகராட்சியின் அங்கம்போல உள்ளது. ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் இப்பகுதியில் அதிக அளவில் குடியிருந்து வருகின்றனர். பேரூராட்சி அந்தஸ்தில் உள்ள இந்த ஊராட்சியை கிராம ஊராட்சியாக நிர்வகிப்பது மிகவும் சவாலான ஒன்று. எனவே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியை அருகில் உள்ள ஒரு பேரூராட்சி அல்லது மாநகராட்சியில் இணைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பிச்சாண்டார்கோவிலின் முக்கிய அங்கமாக உள்ளது ரெயில்வே மேம்பாலம். எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும் இந்த ரெயில்வே மேம்பாலம் சுமார் 600 மீட்டர் நீளம் உள்ளது. சேலம் மற்றும் துறையூர் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் பிச்சாண்டார்கோவில் ரெயில்வே மேம்பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். மேம்பாலம் இல்லாதபோது இந்த இடத்தில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக காலதாமதம் ஏற்படும். போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படும். இந்நிலையில் மேம்பாலம் கட்டியபிறகு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மிக எளிதாக வாகனங்கள் சென்று வருகின்றன. இது ஒரு வகையில் மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் இந்த ரயில்வே மேம்பாலத்தால் பிச்சாண்டார் கோவில் பகுதி பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து ஊரில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. ரயில்வே தண்டவாளத்திற்கு மேற்கு பகுதியில்தான் ஆதி மக்கள் வாழ்ந்து வரும் பிச்சாண்டார்கோவில் கிராம மக்கள். இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தனி வீடுகளிலும் வசிக்கின்றனர். இப்பகுதி பொதுமக்கள் அன்றாடம் பள்ளி, கல்லூரிகளுக்கும், வங்கிகளுக்கும், பஸ் ஏறவும், அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டுமானால் தண்டவாளத்தை கடந்து கடைவீதிக்கு செல்ல வேண்டி உள்ளது. காலம் காலமாக இப்பகுதி பொதுமக்கள் இப்படித்தான் இந்த பாதையை கடந்து சென்று வந்தனர். குறிப்பாக யாராவது இறந்துவிட்டால் கூட தண்டவாளத்தை கடந்துதான் இறுதி ஊர்வலம் செல்லும்.

இந்நிலையில் ரெயில்வே தண்டவாளத்தின் மேல் மேம்பாலம் கட்டப்பட்டதும் தண்டவாளத்தை கடந்து செல்லும் பாதை தடுக்கப்பட்டது. அந்த பாதை முற்றிலும் அடைக்கப்பட்டது. இதனால் பிச்சாண்டார்கோவிலில் இருக்கும் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி சுற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் கால தாமதமும் வீண் அலைச்சலும் இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக யாராவது இறந்துவிட்டால் இறுதி ஊர்வலம் நடத்துவது என்பது பெரிய இடர்பாடாக உள்ளது. மேம்பாலத்தில் ஏறி இறங்கி இறந்தவர்களின் உடலை போக்குவரத்து நெரிசலில் எடுத்து செல்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. இது குறித்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மருதராஜா வெற்றி பெற்று எம்பியாக பொறுப்பெற்றார். எம்பி மருதராஜாவிடம் இப்பகுதி பொதுமக்கள் தண்டவாளத்தின் குறுக்கே சுரங்க பாதை அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். அவரும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். தேர்தல் வாக்குறுதியில் இதுபற்றி கூறி இருந்தார். ஆனால் எம்பியா பதவி வகித்து 5 ஆண்டு காலம் முடிவடைந்து விட்டது. அவர் அளித்த வாக்குறுதியும் காற்றோடு பறந்து விட்டது. இதனால் தொகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் மக்களை தேர்தலில் வெற்றிபெறும் எம்பியாவது கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா என்று தொகுதி மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : funeral procession ,Pichandar Temple Village , In the funeral procession, hunger, disconnected, pichandar temple, village
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...