×

எல்லையில் பதற்றம் எதிரொலி சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு: அல்வா, ஜாம் கொண்டு செல்ல தடை

சென்னை: காஷ்மீரில் நடந்து வரும் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டை, இந்தியாவின் விமானப்படை தாக்குதல் காரணமாக தீவிரவாதிகள் இந்தியாவின் முக்கிய பகுதிகளை தாக்க திட்டமிட்டுள்ள தகவலால் சென்னை விமானநிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்த பிறகு, இந்திய எல்லையில் பாகிஸ்தான் கடுமையான ஷெல் தாக்குதலை நடத்தி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கடுமையாக தாக்கி வருகிறது. மேலும் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள படையினர் ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிரவாதிகளை காஷ்மீரில் வேட்டையாடி வருகின்றனர். இதனால் கடும் கோபத்தில் உள்ள தீவிரவாத இயக்கம், இந்தியாவில் விமான கடத்தல் போன்ற நாசவேலைகளில் ஈடுபடலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 1 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 7 அடுக்குப் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பார்வையாளர் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு அவர்கள் மோப்ப நாய் உதவியுடன் இடைவிடாமல் சோதனை நடத்தி வருகின்றனர்.விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் விமான நிலைய நுழைவு வாயிலிலேயே நிறுத்தப்பட்டு மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்திய பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், விமானங்களுக்கு எரி பொருள் நிரப்பும் இடம், சரக்கு பார்சல்கள் கையாளும் இடங்கள், கார் பார்க்கிங் பகுதிகளில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமான நிலைய பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு அவர்களின் பணி நேரங்களும் கூடுதலாக்கப் பட்டுள்ளன. விமானப் பயணிகள் கொண்டுவரும் உடமைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் நடைபெறுகின்றன.

உணவு பொருட்களுக்கு தடை ஏன்?
அல்வா, ஜாம், ஊறுகாய் போன்ற உணவுப்பொருட்களில் வெடிப் பொருட்களை மறைத்து வைக்க வாய்ப்புள்ளது. திரவப்பொருட்களில் வெடி, மருந்துகள் கொண்டு செல்ல வாய்ப்பு இருப்பதால் திரவப் பொருட்கள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்துக்குள் பயணிகள், விமான ஊழியர்கள், விமானம் சார்ந்த நிறுவன பணியாளர்கள் தவிர தேவையில்லாத வெளி நபர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரிசூலம் ரயில்நிலைய சுரங்கப்பாதை வழியாக விமான நிலைய வளாகத்துக்கு வரும் வழியில் போலீசார் நின்றுகொண்டு விமானப் பணியாளர்களின் அடையாள அட்டைகளை வாங்கி சரிபார்த்த பின்பே உள்ளே அனுமதிக்கின்றனர்.
இதேபோல், சென்னை விமான நிலையம் முழுவதுமே முழு பாதுகாப்புவளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உச்சக்கட்ட 7 அடுக்கு பாதுகாப்பு தொடரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : border ,airport ,Alva , Tension on the border, 7th layer of protection, Alva, Jam, bans
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது