×

விவசாய கிணற்றில் தண்ணீர் எடுத்த டேங்கர் லாரி சிறைபிடிப்பு

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேப்பூர்தாங்கல் பகுதியில் சட்ட விரோதமாக 15க்கும் மேற்பட்ட ஆழ்துளை பம்புகள் மற்றும் விவசாய கிணறுகளில் மோட்டார் அமைத்து இரவு, பகலாக  டேங்கர் லாரிகளில்  தண்ணீர் திருடப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தது.  இந்நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு நேற்று தண்ணீர் எடுத்துச் சென்ற டேங்கர் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை போலீசார் போராட்டத்தில்  ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதைத்தொடர்ந்து நிலத்தடி நீர் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘’இங்கு விவசாய கிணறுகளில் தண்ணீர் திருடி விற்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் திருடப்பட்டு வருவதால்  நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. நீர்நிலைகளுக்கு சென்று தண்ணீர் கொண்டு வரும் அவல நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளோம். கோடை காலம் துவங்கும் முன்பே இத்தகைய நிலை என்றால் வரும் நாட்களில் நிலமை இன்னும் மோசமாகி விடும். இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’  என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : farm , water,farm well, Tanker lorry, captivity
× RELATED தும்மனட்டி பண்ணையில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி