×

சர்க்கார், மகமதுல்லா சதம் வீண் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

ஹாமில்டன்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணி இன்னிங்சில் மற்றும் 52 ரன் வித்தியாசத்தில் வென்றது. செடான் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச... வங்கதேசம் முதல் இன்னிங்சில் 234 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. தமிம் இக்பால் 126 ரன் விளாசினார். அடுத்து  களமிறங்கிய நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 715 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜீத் ராவல் 132, லாதம் 161, நிகோல்ஸ் 53, கேப்டன் கேன் வில்லியம்சன் 200*, கிராண்ட்ஹோம் 76* ரன் அடித்தனர்.இதைத் தொடர்ந்து, 481 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்திருந்தது. சவும்யா சர்க்கார் 39, கேப்டன் மகமதுல்லா 15 ரன்னுடன்  நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். கடுமையாகப் போராடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர்.

சர்க்கார் - மகமதுல்லா இணை 5வது விக்கெட்டுக்கு 235 ரன் சேர்த்தது. சர்க்கார் 149 ரன் (255 பந்து, 21 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி டிரென்ட் போல்ட் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிட்டன் தாஸ் 1,  மிராஸ் 1, அபு ஜயித் 3 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். மகமதுல்லா 146 ரன் (229 பந்து, 21 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சவுத்தீ பந்துவீச்சில் போல்ட் வசம் பிடிபட்டார். எபாதத் உசேன் டக் அவுட்டாகி வெளியேற, வங்கதேசம் 2வது இன்னிங்சில் 429 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (103  ஓவர்).
காலித் அகமது 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் 5 (28-3-123-5), சவுத்தீ 3, வேக்னர் 2 விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன் வித்தியாசத்தில்  வெற்றியை வசப்படுத்தியது. கேன் வில்லியம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் வெலிங்டனில் 8ம் தேதி தொடங்குகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sarkar ,innings ,Mahmudullah Sadhu ,New Zealand , Sarkar, Mahmudullah Sadhu ,New Zealand, innings
× RELATED எம்பி கார் மீது தாக்குதல்