×

இங்கிலாந்துடன் ஒருநாள் தொடரை சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ்: தாமஸ், கிறிஸ் கேல் அசத்தல்

செயின்ட் லூசியா: இங்கிலாந்து அணியுடனான 5வது ஒருநாள் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.கிராஸ் ஐலெட், டேரன் சம்மி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் தடுமாறிய இங்கிலாந்து அணி 28.1 ஓவரிலேயே 113 ரன்னுக்கு  சுருண்டது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் தலா 23, கேப்டன் இயான் மோர்கன் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். 24.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்திருந்த இங்கிலாந்து, மேற்கொண்டு 2 ரன் மட்டுமே சேர்த்து 5 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. கடைசி 3 வீரர்கள் டக் அவுட்டாகினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஒஷேன் தாமஸ் 5.1 ஓவரில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் பிராத்வெய்ட் தலா 2, காட்ரெல் 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து 50 ஓவரில் 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், கிறிஸ் கேலின் அதிரடி  ஆட்டத்தால் 12.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து அபாரமாக வென்றது. அந்த அணிக்கு இன்னும் 227 பந்துகள் எஞ்சியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 இங்கிலாந்து பந்துவீச்சை தவிடுபொடியாக்கிய கிறிஸ் கேல் 77 ரன் (27 பந்து, 5 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி மார்க் வுட் வேகத்தில் கிளீன் போல்டானார். கேம்ப்பெல் 1, ஷாய் ஹோப் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.டேரன் பிராவோ 7, ஹெட்மயர் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட் 2, வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது (3வது போட்டி மழையால் ரத்து). ஒஷேன் தாமஸ் ஆட்ட நாயகன் விருதும், கிறிஸ் கேல் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி இதே மைதானத்தில் 6ம் தேதி நடைபெறுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : West Indies ,Thomas ,series ,Chris Gale ,England , West Indies, Thomas ,Chris Gale
× RELATED சில்லி பாயின்ட்...